NEET-UG 2024 : மறு தேர்வா?! அனைத்து மாணவர்களின் ரிசல்ட்டையும் வெளியிடுங்கள் - தலைமை நீதிபதி
யுஜி நீட் தேர்வின் முழு முடிவுகளையும், மாணவர்களின் பெயர்களை மட்டும் மறைத்துவிட்டு நகரம், மையம் எனப் பிரித்து வரும் சனிக்கிழமை (ஜூலை 20) மதியம் 12 மணிக்குள் வெளியிடுமாறு தேசிய தேர்வு முகமைக்கு (NTA) உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் உத்தரவிட்டுள்ளார்.
2024 யுஜி நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாகப் பல்வேறு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட நிலையில் அவை அனைத்தையும் ஒன்றாக வைத்து இன்று தலைமை நீதிபதி சந்திரசூட், ஜேபி பர்திவ்லா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய தலைமை பென்ச் விசாரித்தது.
அப்போது பலவகையான வாதங்கள் எழுப்பப்பட்ட நிலையில் தலைமை நீதிபதி சந்திரசூட் ‘’நாடு முழுக்க முறைகேடு நடந்திருக்கிறது என்பதை உறுதிப்படுத்த எந்த ஒரு வலுவான ஆதாரமும் இல்லை. அதேசமயம் இதைத் தீர விசாரிக்காமல், ஆவணங்களை அலசிப்பார்க்காமல் தீர்ப்பு சொல்வது நியாயமாக இருக்காது. தற்போதைய நிலவரப்படி, பாட்னா மற்றும் ஹசாரிபாக்கில் நடந்த தவறுகள் மட்டுமே நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இதனை வைத்து நாடு முழுக்க தேர்வை மீண்டும் நடத்துங்கள் என சொல்லமுடியது. ஏற்கெனவே நடந்த பரிட்சையை ரத்து செய்யவும் முடியாது.
ஆனால், நாடு முழுக்க இந்தத் தேர்வின் முடிவுகளில் என்ன நடந்திருக்கிறது என்பதற்கு இன்னும் எந்தத் தெளிவான தரவுகளும் கிடைக்கவில்லை. அதனால் இந்தியா முழுக்க தேர்வெழுதிய எல்லா மாணவர்களின் ரிசல்ட்டையும் பெயரை மறைத்துவிட்டு வெளியிடுங்கள். எல்லா சென்டர்களின் ரிசல்ட்டையும் பார்க்கும்போது இதில் எதுவும் குளறுபடிகள் தெரிகிறதா எனப்பார்ப்போம். இதன்மூலம் நமக்கு நமது கடமையைச் சரியாகச் செய்திருக்கிறோம் என்கிற திருப்தியாவது கிடைக்கும்'’ என்ற தலைமை நீதிபதி வழக்கை மீண்டும் அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்திருக்கிறார்.