தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளர்... யார் இந்த முருகானந்தம்?!
யார் இந்த முருகானந்தம் ஐஏஎஸ்?
1991-ம் ஆண்டு பேட்ச் அதிகாரியான முருகானந்தம் தற்போது முதலமைச்சரின் முதன்மை செயலாளராக உள்ளார். முதுநிலை கணினி அறிவியல், ஐஐஎம் லக்னோவில் எம்பிஏ படித்துள்ள இவர், தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றியுள்ளார்.
அதிமுக ஆட்சியில் தொழில்துறையின் முதன்மை செயலாளராக பொறுப்பு வகித்த முருகானந்தம், திமுக ஆட்சி அமைந்தவுடன் நிதித் துறையின் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டார். பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நிதி அமைச்சராக இருந்த போது, நிதித்துறை செயலாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர், கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகத்தின் இயக்குநர், புதுதில்லியில் தமிழ்நாடு அரசின் முதன்மைக் குடியுரிமை ஆணையர், தொழில்துறைச் செயலர், நிதித்துறை உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார்.
முதல்வரின் செயலாளராக பணியாற்றி வந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி முருகானந்தம், தமிழக அரசின் 50வது தலைமைச் செயலாளராக நேற்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார். தலைமை செயலாளராக பதவி வகித்த வந்த ராஜஸ்தானை சேர்ந்த சிவ்தாஸ் மீனா ஐஏஎஸ், நேற்று தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து முருகானந்தம் இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு பெற்றுள்ளார்.
முருகானந்தம் இருந்த இடத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த லட்சுமிபதி ஐஏஎஸ், முதலமைச்சரின் இணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக இளம் பகவத்தை நியமித்து தலைமை செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார்.