கார் மார்க்கெட்டை அசால்ட் செய்யப்போகும் சிட்ரியான் Basalt…எஸ்யூவி கூபே காரில் என்ன எதிர்பார்க்கலாம்?
ஃப்ரெஞ்சு கார் தயாரிப்பு நிறுவனமான சிட்ரியான் சென்னை திருவள்ளூரில் தொழிற்சாலைத்திறந்து கார்களைத் தயாரித்துவருகிறது. C3 Aircross SUV மற்றும் ஹேட்ச்பேக், C5 Aircross SUV என மூன்று கார்களை பெட்ரோல் மட்டுமல்லாது எலெக்ட்ரிக் வர்ஷனிலும் வெளியிட்டு விற்பனை செய்துவருகிறது சிட்ரியான்.
ஆனால், இந்த இரண்டு கார்களுமே பெரிதாக வெற்றிபெறவில்லை. இதனால் அதிகப்படியான டிஸ்கவுன்ட்டுகளைக் கொடுத்து விற்றுவருகிறது சிட்ரியான். நல்ல தரமான கார்களாக இருந்தும் விற்பனையில் சிட்ரியான் கார்கள் பின்தங்குவதற்கான காரணமாக சொல்லப்படுவது போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது விலைக்கு ஏற்ற சரியான சிறப்பம்சங்கள் (Features) இல்லை என்பதுதான். அதனால் தற்போது புதிதாக அறிமுகப்படுத்தப்போகும் இந்தியாவுக்கே புதிய டிசைனான எஸ்யூவி கூபே காரான சிட்ரியான் பசால்ட்டில் எல்லா சிறப்பம்சங்களையும் சேர்த்து வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்கிற கட்டாயத்தில் தயாரிப்பைத் தொடங்கியிருக்கிறது சிட்ரியான்.
சி3 ஏர்கிராஸ் மற்றும் அதன் எலெக்ட்ரிக் வெர்ஷன் மற்றும் ஹேட்ச்பேக் கார்கள் தயாராகும் அதே பிளாட்ஃபார்மில்தான் சிட்ரியான் Basalt காரும் தயாரிக்கப்பட இருக்கிறது. எஸ்யூவி கூபே என வகைப்படுத்தப்படும் இந்தக் காரில் 1.2லிட்டர் பெட்ரோல் இன்ஜின் இடம்பெற்றிருக்கிறது. இது 110bhp பவரைக்கொண்டதாக இருக்கும். மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரண்டு கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுமே இருக்கிறது.
பசால்ட் 4.3 மீட்டர் நீளம் கொண்டிருப்பதால் காருக்குள் இடவசதியும் அதிகம் இருக்கும் என்றே எதிர்பார்க்கலாம். அதோடு ஏராளமான சிறப்பம்சங்களையும் காரில் சேர்த்திருக்கிறது சிட்ரியான்.
மகேந்திர சிங் தோனியை பிராண்ட் அம்பாசிடராக அறிவித்திருக்கும் சிட்ரியான் இந்தியாவில் நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறது. பசால்ட்தான் கேம்சேஞ்சராக இருக்கும் என நம்புகிறது சிட்ரியான். என்ன நடக்கும் எனப்பார்க்கலாம்!