சென்னையில் நள்ளிரவு முதல் தொடரும் மழை… அடுத்த ஐந்து நாட்களுக்கு நீடிக்கும்!
நவம்பர் 12 முதல் 17 வரை தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் அடுத்த இன்னிங்ஸ் ஆரம்பமாகியிருக்கிறது. இந்த இன்னிங்ஸில் மழை தொடர்ந்து ஆறு நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட கிழக்கு கடற்கரை மற்றும் மத்திய மாவட்டங்களில் தினமும் விட்டுவிட்டு மழை பெய்யும்.
இந்தாண்டு பருவ மழையின் 5வது கட்டம் நேற்று நள்ளிரவு தொடங்கியது. போரூர் உள்ளிட்ட சென்னையின் வடக்குப்பகுதிகளில் நள்ளிரவு பலத்த மழை பெய்து சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இன்று நவம்பர் 12-ம் தேதி முழுவதும் தொடர்ந்து சென்னை முழுவதும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மற்ற மாவட்டங்களின் நிலவரம் என்ன?!
இந்த மழை சென்னையுடன் மட்டுமல்லாது விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், சேலம், பெங்களூரு, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருச்சி, பெரம்பலூர், கடலூர், புதுச்சேரி, கள்ளக்குறிச்சி மற்றும் டெல்டா பகுதியின் சில பகுதிகளிலும் பரவலாக பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், சென்னையை சார்ந்த பகுதி மக்கள் எச்சரிக்கையாக இருக்கவும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது. ஆனால், இந்த மழையினால் வெள்ள பாதிப்புகள் ஏற்படாது எனவும் தெரியவந்துள்ளது!
அதேப்போல் இன்று பள்ளிகள் வழக்கம்போல செயல்படும் என சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.