‘’ராகுல் காந்தியின் ஒரே ஒரு ஸ்வீட் பாக்ஸ்… மோடி க்ளோஸ்’’ - மு.க.ஸ்டாலின் முப்பெரும் விழாவில் பேசியது என்ன?
திமுகவின் முப்பெரும் விழா நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிவிழாவாக நேற்று இரவு கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் திமுக கூட்டணிக்கட்சித்லைவர்கள், 40 எம்பிக்கள் எனப்பலரும் கலந்துகொண்டர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் குவிந்த இந்த விழாவில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்துகொள்வதாக இருந்தது. ஆனால், அவர் கலந்துகொள்ளவில்லை. அவருக்கு பதிலாக கட்சியின் துணைத்தலைவரான முன்னாள் காவல் அதிகாரி மெளரியா கலந்துகொண்டார். விழாவில் தலைவர்கள் பேசியது என்ன?!
தொல். திருமாவளவன் - விடுதலை சிறுத்தைகள்
‘’பொதுவாக தேர்தல் காலக் கூட்டணிகள் அதன்பின்னர் தொடராது. அடுத்த தேர்தலில் கட்சிகள் கூட்டணி மாறிவிடும். ஆனால், திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணி இந்தக்கூட்டணி கடந்த நான்கு தேர்தல்களையும் ஒன்றாகச் சந்தித்து வெற்றிபெற்றுவருகிறது. திமுகவின் கோட்டையான திண்டுக்கல் தொகுதியை கம்யூனிஸ்ட்டுக்கு விட்டுக்கொடுத்துவிட்டு, சவாலான கோயம்புத்தூர் களத்தில் திமுக நேரடியாகக் களமிறங்கி ரிஸ்க் எடுத்தது. வெற்றிபெற்றது. தாமரையை மலரவிடாமல் செய்தது. இந்தியா கூட்டணியில் ராகுல் காந்திதான் பிரதரமர் வேட்பாளர் என முதலில் முழங்கியவர் மு.க.ஸ்டாலின்தான்.’’
கே.பாலகிருஷ்ணன் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
‘’கோயம்புத்தூரை மதக்கலவர மண்ணாக மாற்றிவிட முயன்றவர்களின் காலை முறித்து மூலையில் உட்கார வைத்துள்ளது தமிழ்நாடு. பாஜகவுக்கும் அதிமுக உள்ளிட்ட அவர்களது அடிவருடிகளுக்கும் எப்போதும் இங்கே இடமில்லை என்பதை தமிழக மக்கள் திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார்கள்.’’
முத்தரசன் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
‘’எடப்பாடி பழனிசாமி அதிமுக விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக சொல்லியிருக்கிறார். ஆனால், உண்மையான காரணம் என்பது வேறு. பாஜகவுடன் கூட்டணியில்லை என்றவர்கள் அடுத்த தேர்தலில் அவர்களுடன் கூட்டணிக்குத் தயாராகிவிட்டார்கள். அதனால்தான் போட்டியில்லை என அறிவிக்கிறார்கள். திமுக கூட்டணியே விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் மிகப்பெரிய வெற்றிபெறும்.’’
செல்வப்பெருந்தகை - காங்கிரஸ் கட்சி
‘’மு.க.ஸ்டாலினின் மூன்று ஆண்டுகால நல்லாட்சிக்கு மக்கள் அளித்துள்ள நற்சான்றுதான் நாற்பதுக்கு நாற்பது வெற்றி. இது எப்படி சாத்தியமானது என எல்லோரும் ஆராய்ந்துகொண்டிருக்கிறார்கள். மக்களுக்கு தேவையான திட்டங்களை அறிவித்து, அதை செயல்படுத்தி, கண்காணித்து தமிழ்நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும் மு.க.ஸ்டாலினின் கடின உழைப்புதான் வெற்றிக்கு காரணம்.’’
மு.க.ஸ்டாலின் - திமுக
‘’தேர்தலுக்கு முன்பாக கோயம்புத்தூரில் நான் கலந்துகொண்ட பிரசாரக்கூட்டம் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனது. அதற்கு காரணம் எட்டு முறை தமிழ்நாட்டுக்கு வந்து மோடி கட்டமைத்த பிம்பத்தை, ராகுல் காந்தி ஒரேயொரு ஸ்வீட்பாக்ஸ் கொடுத்து க்ளோஸ் செய்துவிட்டார். அன்றைக்கு அவர் வழங்கிய இனிப்பு எதிர்கட்சியினரின் கணிப்புகளை எல்லாம் பொய்யாக்கியது.
பாஜக 400 இடங்களை வெல்லும் என்று சொன்னார்கள். ஆனால், அதை உடைத்து பாஜக-வால் தனித்து அரசமைக்க முடியாத நிலையை உருவாக்கியிருக்கிறோம். 237 உறுப்பினர்கள் பாஜகவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் உட்கார்ந்திருக்கிறோம். பாஜக இனி நினைத்தையெல்லாம் செய்யமுடியாது. தமிழகத்தில் 40/40 வெற்றியால் என்ன பயன் எனக்கேட்கிறார்கள். ‘’நாடாளுமன்றக் கேன்டீனில் வடை சாப்பிடச் செல்கிறார்களா?’’ எனக்கேட்கிறார்கள். வாயால் வடை சுடுவது உங்கள் வேலை. எங்கள் எம்பிக்கள் கருத்துகளால் உங்கள் ஆணவத்தைச் சுடுவார்கள்'’ எனப்பேசினார் மு.க.ஸ்டாலின்