கோயம்புத்தூரில் கெத்து காட்ட நினைக்கும் மு.க.ஸ்டாலின்… இன்று மாலை கொடிசியாவில் திமுகவின் முப்பெரும் விழா!
தமிழ்நாட்டில் ஆளும்கட்சியாக இருந்தாலும், நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் 40 தொகுதிகளிலும் வெற்றிபெற்றாலும் கோயம்புத்தூர் மாவட்டமும், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளும் இன்னும் திமுகவின் கட்டுப்பாட்டுக்குள் இல்லை.
அதனால் கோவை,சேலம் உள்ளிட்ட பகுதிகளில் கட்சியை பலப்படுத்த துடிக்கிறது திமுக. அதன் ஒரு கட்டமாக கோவை கொடிசியா மைதானத்தில் திமுகவின் முப்பெரும் விழாவுக்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது.
நாடாளுமன்ற தேர்தலில் மகத்தான வெற்றியை அளித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பது, நூறு சதவிகித வெற்றிக்காக உழைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிப்பது மற்றும் கலைஞர் நூற்றாண்டு நிறைவு என முப்பெரும் விழாவாக இந்த விழா இன்று மாலை 5 மணிக்கு நடைபெற இருக்கிறது.
தமிழ்நாடு முழுக்க தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் திமுக எம்பிக்கள் மட்டுமல்லாது, கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த 40 தொகுதி எம்.பிக்களும், தமிழக அமைச்சர்களும், திமுக எம்.எல்.ஏ-க்களும் இந்த முப்பெரும்விழாவில் பங்கேற்க இருக்கின்றனர். அதோடு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, எம்பியும் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவருமான திருமாவளவன் என திமுக கூட்டணி கட்சித் தலைவர்களும் விழாவில் பங்கேற்கின்றனர்.
ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் விழாவில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்தக் கூட்டத்தை வெற்று விளம்பரத்துக்காக நடக்கும் விழா என பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்துவருகின்றன.