இங்கிலாந்து கலவரம்
இங்கிலாந்து கலவரம்

கொலையாளி முஸ்லிம் என்கிற வதந்தியால் வெடித்த வன்முறை… இங்கிலாந்து கலவரத்துக்கு பின்னால் நடப்பது என்ன?

''கலவரத்தில் ஈடுபட்டிருக்கும் தீவிர வலதுசாரி குண்டர்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த வன்முறையில் நேரடியாகவும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் பங்கேற்றவர்கள் சட்டத்தின் முன்பாக நிறுத்தப்படுவார்கள்'' - இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர்
Published on

இங்கிலாந்தில் தற்போதுதான் தேர்தல் முடிந்து கீர் ஸ்டார்மர் தலைமையில் தொழிலாளர் கட்சியின் ஆட்சி அமைந்திருக்கும் நிலையில், கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான கலவரத்தை இங்கிலாந்து சந்தித்துவருகிறது. தீவிர வலதுசாரி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், அகதிகள், புலம்பெயர்ந்தோர், முஸ்லிம்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்திவருகின்றனர். 

கடந்த ஜூலை மாதம் 29-ம் தேதி இங்கிலாந்தின் கடலோர நகரமான சவுத்போர்ட்டில் உள்ள நடனப்பள்ளியில் மூன்று சிறுமிகள் கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை நடத்தியது புலம்பெயர்ந்த தீவிர இஸ்லாமியவாதி என்று சமூக ஊடகங்களில் தகவல் பரவியதுதான் கலவரம் வெடிக்க காரணம்.

இங்கிலாந்து கலவரம்
இங்கிலாந்து கலவரம்

சவுத்போர்ட் நகரில் 6 வயது, 7 வயது, 9 வயது என 10 வயதுக்குள்ளான மூன்று சிறுமிகள் கொல்லப்பட்ட அடுத்தநாளான ஜூலை 30-ம் தேதி இங்கிலீஷ் டிஃபென்ஸ் லீக் எனும் அமைப்பைச் சேர்ந்த 300 பேர் கொண்ட கும்பல் ஒரு மசூதியைக் குறிவைத்து தாக்க இங்கிருந்துதான் கலவரம் தொடங்கியது. அடுத்தநாள் இக்கலவரம் நியூட்டன் ஹீத் நகரத்துக்குப் பரவ, இங்கிலாந்தில் புகலிடம் கேட்பவர்கள் தங்கியிருக்கும் ஹாலிடே இன் ஹோட்டல் கலவரக்காரர்களால் தாக்கப்பட்டது. இதுவரை 140க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் ஏராளமான பொதுசொத்துகள் நாசமடைந்திருக்கின்றன. 

கலவரம் ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆன நிலையிலும் கலவரத்தை முற்றிலுமாக கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறிவருகின்றனர். இந்தக் கலவரத்தில் ஏராளமான போலீஸாரும் காயமடைந்திருக்கின்றனர்.

இதற்கிடையே சிறுமிகளை கொலை செய்ததாகச் சொல்லப்படும் நபருக்கு 17 வயதுதான் என்றும், அவர் கார்டிஃப் நகரில் பிறந்தவர் என்றும் போலீஸார் சொல்கின்றனர். மேலும் கொலையாளி கிறிஸ்தவ குடும்பத்தைச் சேர்ந்தவர் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால், வலதுசாரி இயக்கத்தைச்சேர்ந்தவர்கள் தொடர்ந்து இஸ்லாமிய வெறுப்பை சமூகவலைதளங்களின் வழியே பரப்ப்புவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்து கலவரம்
இங்கிலாந்து கலவரம்

''கலவரத்தில் ஈடுபட்டிருக்கும் தீவிர வலதுசாரி குண்டர்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த வன்முறையில் நேரடியாகவும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் பங்கேற்றவர்கள் சட்டத்தின் முன்பாக நிறுத்தப்படுவார்கள்'' எனச்சொல்லியிருக்கிறார் இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர்.

இங்கிலாந்தில் நீண்ட நாட்களாக புகைந்துகொண்டிருந்த இஸ்லாமிய வெறுப்பு இப்போது வெளியேவந்திருக்கிறது. வெறுமனே கைது நடவடிக்கைகள் மட்டும் இல்லாமல் இஸ்லாமிய வெறுப்பைத்தூண்டும் வலதுசாரி அமைப்பினரைத் தடை செய்யவேண்டும் என்கிற கோரிக்கையும் பரவலாக எழுந்துவருகிறது.

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com