டிரம்ப் தாக்குதல்: டிப்ரஷன்,கேமிங் தளத்தில் மேசேஜ், 50 ரவுண்ட் புல்லட்ஸ்... தாமஸ் க்ரூக்ஸ் பின்னணி!
டொனால்ட் டிரம்ப் மீது நிகழ்த்தப்பட்ட படுகொலை தாக்குதல் குறித்து பல்வேறு வீடியோக்களும், சர்ச்சை செய்திகளும் பரவிவருகின்றன. டிரம்ப்பை படுகொலை செய்ய முயற்சித்த தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் பிரசார கூட்டம் நடந்த இடத்தில் ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவே சுற்றிவந்தது தற்போதைய வீடியோக்களில் நிரூபணமாகியிருக்கிறது.
யார் இந்த தாமஸ் க்ரூக்ஸ்?!
பென்சில்வேனியாவில் உள்ள பட்லர் எனும் இடத்தில் இன்ஜினீயரிங் படித்துக்கொண்டிருந்த தாமஸ் க்ரூக்ஸ் மிகவும் அமைதியான மாணவன் என்றும் கல்லூரியில் கொடுக்கும் அசைன்மெண்ட்டுகளை சரியான நேரத்தில் முடித்துக்கொண்டுவரும் மாணவன் என்றும் சாட்சி சொல்லியிருக்கிறார்கள் அவனது ஆசிரியர்கள். சமீபத்தில் பார்வைக்குறைபாடுள்ளவர்கள் செஸ் விளையாடுவதற்கான ப்ராஜெக்ட்டை தாமஸ் க்ரூக்ஸ் சிறப்பாக செய்து கொண்டு வந்திருந்ததாகவும் கல்லூரி ஆசிரியர்கள் போலீஸ் விசாரணையில் சொல்லியிருக்கிறார்கள்.
தாமஸ் க்ரூக்ஸின் லேப்டாப் மற்றும் போனை ஆய்வு செய்ததில் ‘’ட்ரம்ப், பைடன், ஜூலை 13 டிரம்ப் ராலி'’ என்றெல்லாம் தேடியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதோடு ‘Major Depressive Disorder’ எனும் மனநோய் குறித்தும் தாமஸ் க்ரூக்ஸ் கூகுளில் தேடியிருப்பதாகவும் சொல்லியிருக்கிறது FBI.
சமூக சேவகர்கள்!
சில மாதங்களுக்கு முன்பு தாமஸ் க்ரூக்ஸின் வீடு அமைந்திருக்கும் பெத்தேல் பார்க் பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் உணவு பரிமாறுபவராகவும் வேலை பார்த்திருக்கிறார். க்ரூக்ஸின் அப்பா, அம்மா இருவருமே சமூக சேவகர்கள். க்ரூக்ஸுக்கு ஒரு மூத்த சகோதரி இருக்கிறார்.
Demolition Ranch யூ-ட்யூப் சேனல்!
டிரம்ப்பை கொலை செய்யமுயற்சிக்கும்போது துப்பாக்கி ஆர்வலர்களுக்கான யூ-ட்யூப் சேனலான ‘Demolition Ranch’ பெயர்பதித்த டி-ஷர்ட்டை அணிந்திருந்தார் க்ரூக்ஸ். ஜூலை 13 அன்று அவர் வீட்டின் இருகே இருந்த துப்பாக்கி கடையில் 50 ரவுண்ட் புல்லட்ஸ் வாங்கியிருக்கிறார் தாமஸ் க்ரூக்ஸ். மூன்று நாட்டு வெடிகுண்டுகளையும் வைத்திருந்திருக்கிறார். ‘ஸ்டீம் கேமிங்’ எனும் தளத்தில் ‘’ஜூலை 13 எனக்கான முன்னோட்டம்… நடக்கப்போவதைப் பாருங்கள்'’ என தாமஸ் க்ரூக்ஸ் எழுதியிருந்ததாக FBI அமைப்பு தகவல் வெளியிட்டிருக்கிறது.
ஆனால், இன்னமும் தாமஸ் க்ரூக்ஸ் ஏன் டொனால்ட் டிரம்ப்பை படுகொலை செய்ய முயற்சித்தான், அவனுக்குப் பின்னால் யாரும் இருக்கிறார்களா என்கிற தகவல்கள் கிடைக்கவில்லை எனச் சொல்கிறது FBI.
சீக்ரெட் சர்வீஸ் சீட்டில்!
இதற்கிடையே அமெரிக்க சீக்ரெட் சர்வீஸ் அதிகாரி கிம்பெர்லி சீட்டிலை பதவி விலகச்சொல்லி குடியரசுக் கட்சி செனட்டர்கள் அவரிடம் நேரடியாக வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சிகளும் வெளியாகியிருக்கிறது. சீக்ரெட் சர்வீஸுக்கு டொனால்ட் டிரம்ப் மேடையேறுவதற்கு முன்பாகவே அவர் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்கிற தகவல் தெரியும் என்றும் குற்றச்சாட்டுகள் கிளம்பியிருக்கின்றன.