கேரள கல்லூரியில் 'Gender friendly' கழிவறை... பெருகும் எதிர்ப்பும், நடுநிலையார்களின் ஆதரவும்!
கேரளாவின் எர்ணாகுளத்தில் உள்ள அரசால் நடத்தப்படும் தன்னாட்சிக் கல்லூரியான மகாராஜா கல்லூரி வளாகத்தில் பல ஆண்டுகளாக இருந்து வரும் பாலின நடுநிலை கழிப்பறைகள் திடீரென விவாதப் பொருளாக மாறியுள்ளது. சிலர் இந்தக் கழிவறையின் புகைப்படங்களைப் பகிர்ந்து அதைப்பற்றி இணையத்தில் எழுத, இந்த யோசனைக்கு ஆதரவும், எதிர்ப்பும் பெருகிவருகிறது.
சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்கள், பதிவுகள் மற்றும் கருத்துக்களால் இந்த முயற்சியைப் பாராட்டியும், விமர்சித்தும் வருகிறார்கள். ஒரு கல்வி நிறுவனத்தில் யுனிசெக்ஸ் கழிவறைகள் என்பது தவறான முன்னுதாரணம் எனப்பலர் விமர்சித்திருக்கிறார்கள்.
இதைப்பற்றி அக்கல்லூரியில் பயிலும் மாணவர்களிடம் கேட்டபோது, இது ஒரு நல்ல தொடக்கம் என்றும் இதனால் பாலின வேறுபாடுகளையும் மற்றும் ஏற்றத்தாழ்வுகளையும் களைக்க முடியும் என்றும் சொல்கிறார்கள். அதுமட்டும் இன்றி இந்த முயற்சியை செக்ஸ் எஜுகேஷனில் ஒரு பகுதியாக பார்க்க வேண்டும் என்று கூறுகின்றனர். இந்த கழிவறைகள் 'Gender friendly' கழிவறைகள் என்று அழைக்கப்படுகிறது. அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளில் இத்தகைய கழிவறைகள் புழக்கத்தில் உள்ளன.
இந்த 'Gender friendly' கழிவறைப்பற்றிய உங்கள் கருத்து என்ன?!