இரண்டாம் உலகப் போருக்குப் பின் இப்படி நடந்ததேயில்லை... எச்சரிக்கும் உலகளாவிய அமைதி குறியீடு!
உலகின் பெரும்பாலான நிலப்பரப்புகள் இயற்கை எழிலை சுமந்து கொண்டிருந்தாலும், ஒரு சில நிலப்பரப்புகள் போரின் பிடியில் சிக்கி மனிதர்கள் மட்டுமின்றி எல்லா உயிரினமும் வாழ்வதற்கு ஆபத்தான சூழலை கொண்டிருக்கிறது.
உலகளாவிய அமைதி குறியீடு (Global Peace Index) என்பது ஆஸ்திரேலியாவை தளமாகக் கொண்ட என்ஜிஓ இன்ஸ்டிடியூட் ஃபார் எக்கனாமிக்ஸ் & பீஸ் (ஐஇபி) தயாரிக்கும் அறிக்கையாகும். இது நாடுகள் மற்றும் பிராந்தியங்களின் அமைதியின் ஒப்பீட்டு நிலையை அளவிடுகிறது.
அதாவது GPI அறிக்கை மூலம் உலக நாடுகளின் அமைதியான சூழலை மதிப்பிட்டு நாடுகளை பட்டியலிடும் பணியை இந்த அமைப்பு மேற்கொள்கிறது. 163 நாடுகளை உள்ளடக்கிய இந்த ஆய்வு உலக மக்கள் தொகையில் 99.7 சதவீதத்தைக் குறிக்கிறது. இந்த மதிப்பீடு உலகெங்கிலும் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து பெறப்பட்ட 23 தரமான மற்றும் அளவு குறிகாட்டிகளின் தகவல்களை பயன்படுத்துகிறது.
இந்த ஆண்டு மோதல் சூழல்கள் நிறைந்த ஆண்டாக கருதப்படுகிறது. உலகளாவிய அமைதி குறியீடு 2024 உலகம் சற்று ஆபத்தான பாதையில் பயணிப்பதை வெளிப்படுத்துகிறது. ஒருங்கிணைந்த முயற்சி இல்லாமல், பெரிய மோதல்கள் எழும் அபாயம் உள்ளது.
தற்போது உலகம் முழுவதும் 56 பெரிய மோதல்கள் உள்ளன. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இத்தனை இடங்களில் மோதல்கள் வெடிப்பது இதுவே முதல்முறை. 92 நாடுகள் தங்கள் நாடுகளின் எல்லைகளுக்கு வெளியே மோதல்களில் ஈடுபட்டுள்ளது. இது எந்த ஆண்டும் இல்லாத எண்ணிக்கை என்கிறது ஐஇபி அமைப்பு.
சிறிய அளவிலான மோதல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது எதிர்காலத்தில் இன்னும் பெரிய மோதல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும். எடுத்துக்காட்டாக, 2019-ல் எத்தியோப்பியா, உக்ரைன் மற்றும் காசா அனைத்தும் சிறிய மோதல்களாக அடையாளம் காணப்பட்டன. தற்போது அவை பெரிய போராக மாறியிருக்கின்றன.
உலகளாவிய அமைதி குறியீடு 2024க்கான ஆய்வுகள் நடந்து வரும் நிலையில் இதுவரை வெளியான முடிவுகளின் சில முக்கிய விவரங்கள்:
2008-ல் உலகளாவிய அமைதிக் குறியீட்டுக்கான ஆய்வு தொடங்கப்பட்டதிலிருந்து 97 நாடுகள் அமைதியான நிலையில் இருந்து விலகி பிரச்னைகளை சந்தித்து வருகின்றன.
காசா மற்றும் உக்ரைனில் ஏற்பட்ட மோதல்கள், 2023-ல் 162,000 மரணங்களை ஏற்படுத்தியுள்ளது. உலகளாவிய அமைதியின்மைக்கு இது வழிவகுத்திருக்கிறது.
92 நாடுகள் தற்போது தங்கள் எல்லைகளுக்கு அப்பால் மோதல்களில் ஈடுபட்டுள்ளன, இது சமீபத்திய ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாக உள்ளது.
வன்முறையின் உலகளாவிய பொருளாதார தாக்கம் 2023-ல் 19.1 டிரில்லியன் டாலர் மதிப்புக்கு செலவீனங்களை அதிகரித்துள்ளது. இது உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13.5% பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மோதல்களின் வெளிப்பாடு அரசாங்கங்கள் மற்றும் வணிகங்களுக்கு குறிப்பிடத்தக்க விநியோகச் சங்கிலி ஆபத்தை ஏற்படுத்துகிறது.
ராணுவமயமாக்கல் அதிகரித்து வருகிறது. 2008-ல் இருந்து 108 நாடுகள் புதிதாக ராணுவமயமாகிவிட்டன.
110 மில்லியன் மக்கள் வன்முறை மோதல் காரணமாக அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். 16 நாடுகளில் இப்போது 50 லட்சத்துக்கும் அதிகமான அகதிகள் உள்ளனர்.
வன்முறைக் குற்றங்கள் மற்றும் வன்முறை பயம் அதிகரிப்பதால் வட அமெரிக்கா மிகப்பெரிய பிராந்திய சீரழிவைக் கண்டுள்ளது.
கடந்த ஆண்டு மோதல்களால் 1,62,000 இறப்புகள் பதிவாகியுள்ளன. கடந்த 30 ஆண்டுகளில் இது இரண்டாவது மிக அதிகமான எண்ணிக்கை. உக்ரைன் மற்றும் காசாவில் நடக்கும் மோதல்கள் இந்த எண்ணிக்கையின் கிட்டத்தட்ட முக்கால்வாசி இறப்புகளுக்குக் காரணமாகும்.
உக்ரைன் பாதிக்கு மேலான இறப்புகளை கொண்டுள்ளது. அதாவது 83,000 இறப்புகளைப் பதிவு செய்துள்ளது. ஏப்ரல் 2024 வரை பாலஸ்தீனத்தில் குறைந்தபட்சம் 33,000 பேர் இறந்துள்ளனர்.
2024-ன் முதல் நான்கு மாதங்களில், உலகளவில் நடக்கும் மோதல் தொடர்பான இறப்புகள் 47,000 ஆக இருக்கிறது. இந்த ஆண்டு முழுவதும் இதே விகிதம் தொடர்ந்தால், 1994 ல் ருவாண்டா இனப்படுகொலைக்குப் பிறகு மோதல் இறப்புகளின் அதிகபட்ச எண்ணிக்கையாக இது இருக்கும்.