சென்னைக்கு பெருமழை ஆபத்து குறைந்ததா... நாளைய வானிலை மாற்றம் என்னவாக இருக்கும்?!
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக நேற்று காலை முதல் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட தமிழ்நாட்டில் மழை பெய்துவருகிறது. இன்று மழையின் அளவு அதிகரிக்கும் என்றும், நாளை (அக்டோபர் 16) ரெட் அலர்ட் விடப்பட்டு 20 சென்ட்டிமீட்டருக்கும் மேல் மழை பெய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக பெருமழைக்கான ஆபத்து சென்னைக்கு குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. இருப்பினும் இன்று மாலைக்கு மேல்தான் நாளைய மழை நிலவரம் எப்படியிருக்கும் என்பதைக் கணிக்கமுடியும்.
வானிலையில் உருவாகியுள்ள முக்கிய மாற்றமாக இரட்டை சூறாவளி மண்டலம் வங்காள விரிகுடாவை சுற்றி உருவாகியுள்ளது. இந்த இரட்டை சூறாவளி மண்டலம் இன்னும் வலுவடைந்து தெற்கு ஆந்திரா கரையை நோக்கி நகரும் வாய்ப்பு இருக்கிறது. இதனால் சென்னைக்கு மழை அளவு எந்த அளவுக்கு இருக்கும் என்பது இந்த வளிமண்டலம் சென்னைக்கு எவ்வளவு அருகில் வந்து செல்கிறது என்பதைப் பொருத்துதான் உள்ளது.
அக்டோபர் 16 மற்றும் 17-ம் தேதிகளில் சென்னையின் மழை அளவை இந்த சூழ்நிலைகளே தீர்மானிக்கின்றன. எதிர்பார்த்தபடி இல்லாமல் வானிலை முன்னறிவிப்பு மாடல்கள் மழை அளவை இன்று முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கும் குறைத்து காட்டியுள்ளன. இதனால், சென்னைக்கு பெருமழை ஆபத்து குறையலாம் என்றே எதிர்பார்க்கலாம்.