எலான் மஸ்க் - டிரம்ப் உரையாடல்: கமலா ஹாரிஸின் தூக்கம், இஸ்ரேலின் அயர்ன் டோம், புதினுடன் நட்பு!
உலகின் முன்னணி தொழிலதிபரும், எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) தளத்தின் உரிமையாளருமான எலோன் மஸ்க், முன்னாள் அமெரிக்க அதிபரும் குடியரசுக் கட்சி வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப்பை தனது சமூக ஊடக வலையமைப்பில் (X) பேட்டி கண்டார். இந்திய நேரப்படி காலை 5:30 மணிக்குத் தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்த இந்த நிகழ்வு, DDOS என்னும் சைபர் தாக்குதலால் 40 நிமிடங்களுக்கு மேல் தாமதமானது.
இந்த நேர்காணலில் மஸ்க் மற்றும் டிரம்ப் பல விஷயங்களைப் பற்றி பேசினர். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த உரையாடலின் போது, கடந்த மாதம் டிரம்ப் மீதான படுகொலை முயற்சி குறித்து பேசினர்.
2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டிரம்ப் தனது ஜனநாயகக் கட்சி போட்டியாளரான கமலா ஹாரிஸைத் தாக்கிப் பேச இதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி கொண்டார்.
1.3 மில்லியனுக்கும் அதிகமான X பயனர்கள் இணைந்த இந்த நேர்காணலில் டிரம்ப் கமலா ஹாரிஸை கடுமையாக விமர்சித்தார். வெள்ளை மாளிகைக்கான போட்டியில் ஜோ பைடனுக்குப் பதிலாக களமிறங்கிய கமலா ஹாரிஸ், டிரம்பின் பிம்பத்தை சில நாட்களில் துவம்சம் செய்தார்.
அமெரிக்க தேர்தல் சமயத்தில் எப்போதுமே லைம் லைட்டில் இருந்த டிரம்ப், கமலா ஹாரிஸின் வரவால் பின்னுக்கு தள்ளப்பட்டார். மீடியா வெளிச்சத்தை கமலா கைப்பற்றி கொண்டார் என்கிறது அமெரிக்க அரசியல் வட்டாரம். தற்போது விட்ட இடத்தை பிடிக்க டிரம்ப் கடுமையாக போராடி வருகிறார். எலான் மஸ்க் உடனான இந்த நேர்காணல், டிரம்ப் ஊடக வெளிச்சத்தைக் கைப்பற்ற ஒரு வாய்ப்பாக அமைந்தது.
கமலா ஹாரிஸ் பற்றி பேசிய டிரம்ப்
"நமக்கு இப்போது அதிபரே இல்லை - பைடனை விட கமலா இன்னும் மோசமானவர். அவர் சான் பிரான்சிஸ்கோ நகரத்தை அழித்தார், கலிபோர்னியாவை அழித்தார், அவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் நம் நாட்டையும் அழித்துவிடுவார்" என்று டிரம்ப் விமர்சித்தார்.
``பணவீக்கத்தால் அமெரிக்க பொருளாதாரம் ஒரு பேரழிவை சந்தித்து வருகிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, மக்கள் நிறைய பணத்தை சேமித்து வைத்திருந்தனர். இன்று அவர்கள் தங்கள் பணத்தை முழுவதுமாக செலவிட்டு வருகின்றனர். அது போதாமல், கடன் வாங்குகிறார்கள். கமலா அதிபரானால் அமெரிக்க பொருளாதாரமும் சிதையும்” என்று கடுமையாக விமர்சித்தார்.
இஸ்ரேல் பற்றி பேசிய டிரம்ப்:
''இஸ்ரேலின் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பான `அயர்ன் டோம்’ (Iron Dome) அந்நாட்டுக்கு எப்போதும் பாதுகாப்பு கவசமாக இருந்து வருகிறது. அதுபோன்று உலகிலேயே சிறந்த அயர்ன் டோமை நாம் பெறப் போகிறோம். அமெரிக்காவுக்கு இது தேவை, நாங்கள் அனைத்தையும் அமெரிக்காவில் உருவாக்கப் போகிறோம். அமெரிக்க மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்” என்றார்.
அயர்ன் டோம் என்பது ஏவுகணை தாக்குதல்களில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இஸ்ரேல் அமைத்துள்ள சக்தி வாய்ந்த கவசம். இது 2006-ல் அமெரிக்க ஆதரவுடன் இஸ்ரேலிய நிறுவனங்களால் கட்டமைக்கப்பட்டது.
இது உலகின் சிறந்த வான் பாதுகாப்பு அமைப்புகளில் ஒன்று.
புதின் மற்றும் கிம் ஜாங் பற்றி பேசிய டிரம்ப்!
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோரை தனக்கு நன்கு தெரியும் என்று டிரம்ப் கூறினார். "அவர்கள் புத்திசாலிகள். அவர்கள் (புதின் மற்றும் கிம்) கமலா மற்றும் பைடன் தூங்கி கொண்டிருப்பதை பார்த்தபோது, அதிர்ச்சி அடைந்தனர்" என்றார். மேலும், உக்ரைனை தாக்க வேண்டாம் என்று புதினிடம் தான் கேட்டுக் கொண்டதாகவும், ஆனால் புதின் கேட்கவில்லை என்றும் டிரம்ப் கூறினார்.
பைடன் அதிபராக இருந்திருக்கவில்லை எனில், ரஷ்யா உக்ரைனை தாக்கியிருக்காது என்று டிரம்ப் கூறினார். பைடன் தான் ரஷ்ய தாக்குதலுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று குறிப்பிட்டு விமர்சித்தார் டிரம்ப். புதினுடன் நான் நல்ல உறவை வளர்க்கிறேன், அவர் என்னை மதிக்கிறார் என்று டிரம்ப் கூறினார். புதினுடன் அடிக்கடி பேசுவதாகவும் கூறினார்.
டிரம்பின் கசப்பான அனுபவம்:
"கசப்பான அனுபவம்": டொனால்ட் டிரம்ப் எலோன் மஸ்க்கிடம் தனக்கு நேர்ந்த கொலை முயற்சி பற்றி பேசினார்.
"என்னை நோக்கி பாய்ந்தது ஒரு தோட்டா என்று எனக்கு உடனடியாக புரிந்தது. அது என் காதை பதம் பார்த்தது எனக்கு தெரியும்... கடவுளை நம்பாதவர்களுக்கு, ஒன்று சொல்கிறேன், இனி உங்கள் முடிவை பரிசீலியுங்கள். நாம் அனைவரும் கடவுள் நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்" என டிரம்ப் கூறினார்.