ஜே.டி.வான்ஸ்
ஜே.டி.வான்ஸ்

'அமெரிக்காவின் ஹிட்லர் ட்ரம்ப்' விமர்சனம் முதல் துணை ஜனாதிபதி வேட்பாளர் வரை… யார் இந்த ஜே.டி.வான்ஸ்?

‘’நான் எப்போதும் ட்ரம்ப் ஆள் இல்லை’’, ‘’ட்ரம்ப் அமெரிக்காவின் ஹிட்லர்'’ என பேட்டிகளில் சொல்லிக்கொண்ருந்த வான்ஸ் இப்போது அதிகாரப்பூர்வமாக ட்ரம்ப்பின் ஆளாக, அவரது பக்கபலமாக மேடையேறியிருக்கிறார்.
Published on

பரபரப்பும், படபடப்புமாக இருக்கிறது அமெரிக்க தேர்தல் களம். மூன்று நாட்களுக்கு முன்பு டொனால்ட் ட்ரம்ப் மீது கொலைமுயற்சி சம்பவம் நிகழ, அரசியல் பிரசாரக் களம் இன்னும் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது. ‘’ஆளும் பைடன் அரசு ட்ரம்ப்பை கொலை செய்ய திட்டமிட்டு தோல்வியடைந்திருக்கிறது’’ என குடியரசு கட்சியினர் பிரசாரம் செய்ய, ‘’இந்தக் கொலை முயற்சி சம்பவத்தை அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்தி அனுதாப வாக்குகளைப் பெற நினைக்கிறார் ட்ரம்ப்'’ என ஜனநாயகக் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்தச்சூழலில்தான் தனது குடியரசு கட்சி வேட்பாளர் நாமினேஷனை ஏற்றுக்கொண்ட ட்ரம்ப், தன்னுடன் போட்டியிடப்போகும் துணை வேட்பாளர் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். 

டொனால்ட் ட்ரம்ப்
டொனால்ட் ட்ரம்ப்

டொனால்ட் ட்ரம்ப் முதன்முதலில் 2016-ல் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டபோது, ​​குடியரசுக் கட்சிக்குள் அவருக்கு எதிராக வலுவாக ஒலித்த ஜே.டி.வான்ஸ்ஸைத்தான் துணை ஜனாதிபதி வேட்பாளராகத் தேர்ந்தெடுத்திருக்கிறார் டொனால்ட் ட்ரம்ப். ‘’நான் எப்போதும் ட்ரம்ப் ஆள் இல்லை’’, ‘’ட்ரம்ப் அமெரிக்காவின் ஹிட்லர்'’  என பேட்டிகளில் சொல்லிக்கொண்ருந்த வான்ஸ் இப்போது அதிகாரப்பூர்வமாக ட்ரம்ப்பின் ஆளாக, அவரது பக்கபலமாக மேடையேறியிருக்கிறார். 

யார் இந்த ஜே.டி.வான்ஸ்?!

39 வயதான வான்ஸ் அமெரிக்காவின் முன்னாள் இராணுவப் பணியாளர். அமெரிக்க கடற்படையில் போர் நிருபராகப் பணியாற்றியவர். இராணுவத்தின் மூலம் சில காலம் ஈராக்கிலும் தங்கி பணியாற்றியிருக்கிறார். யேல் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றவரான வான்ஸ் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனரும் கூட. ஓஹியோ மாகாணத்தில் எஃகு ஆலை தொழிற்சாலை சமூகதில், போதைப்பொருள் மற்றும் வறுமையால் சூழப்பட்ட ஒரு குடும்பத்தில் பிறந்தவர்தான் வான்ஸ். 

‘’Hillbilly Elegy: A Memoir of a Family and Culture in Crisis’’ எனும் புத்தகத்தை எழுதிய வான்ஸ் 2016-ல் இதை வெளியிட்டார். ஓஹியோவில் ஒரு தொழிலாள வர்க்க குடும்பத்தில் வான்ஸ் வளர்ந்ததையும், அமெரிக்காவில் வெள்ளை தொழிலாளி வர்க்கம் எதிர்கொள்ளும் சமூக-பொருளாதார சவால்களையும் பேசிய இந்த புத்தகம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்தப் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு 2020-ல் திரைப்படமும் நெட்ஃபிளிக்ஸில் வெளியானது.

2022 அமெரிக்க செனட்டுக்கு நடந்த தேர்தலில் ஓஹியோவில் குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு செனட்டராக தற்போது பதவி வகித்துவருகிறார் ஜே.டி.வான்ஸ்

“வான்ஸ் அமெரிக்கா எனும் கனவின் உயிருள்ள உருவம். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து கடுமையான உழைப்பால் மேலெழும்பி வந்தவர். இப்போது மிகப்பெரிய உயரத்தை தொட்டிருந்தாலும் தன்னுடைய வேர்களை மறக்காதவர்’’ என்று வான்ஸை புகழ்ந்து பேசி மேடையில் அறிமுகப்படுத்தியிருக்கிறார் ஒஹியோ மாகாணத்தின் துணை ஆளுநர்.

துணை ஜனாதிபதி வேட்பாளர் அறிமுகத்துக்கு முன் மனைவியிடன் ஜே.டி.வான்ஸ்
துணை ஜனாதிபதி வேட்பாளர் அறிமுகத்துக்கு முன் மனைவியிடன் ஜே.டி.வான்ஸ்


ட்ரம்ப் மிகவும் வயதானவர் என்கிற விமர்சனங்களுக்கிடையே, இளம் துணை ஜனாதிபதி வேட்பாளரைக் களத்தில் இறக்கியிருப்பதன் மூலம் இளைஞர்களின் வாக்குகளைக் குறிவைக்கிறது குடியரசு கட்சி. வான்ஸ் தன்னுடைய யேல் சட்டக்கல்லூரியில் வகுப்புத் தோழியும், இந்தியருமான உஷா சிலுக்குரி என்பவரைத் திருமணம் செய்திருக்கிறார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

பைடனின் துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ் எனும் இந்திய வம்சாவழியை சேர்ந்தவர் இருப்பதால் அவரை எதிர்கொள்ளவும் ஒரு இந்தியரை மணந்திருக்கும் வான்ஸை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்கிற விமர்சனமும் அமெரிக்க அரசியலில் எதிரொளிக்கிறது.

இந்தியர்கள் இல்லாமல் உலகில் எங்கேயும் அரசியல் இல்லை!

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com