‘’செந்திலைப் பிடிக்கமுடியல... திருந்தி வாழ்ந்தவனை கொன்னுட்டாங்க'’- காக்கா தோப்பு பாலாஜியின் அம்மா!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் தேடப்படும் முக்கிய குற்றவாளியான சம்போ செந்திலை போலீஸ் தேடிவரும் நிலையில், சம்போ செந்திலின் நேரடி எதிரியான பாலாஜியை போலீஸ் என்கவுன்ட்டர் செய்தது ஏன் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
இதற்கிடையே பிரேத பரிசோதனைக்காக தற்போது ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கும் பாலாஜியின் உடலைப் பார்ப்பதற்காக அவரது தாயார் கண்மணி வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘’என் மகன் எந்த தப்புமே செய்யல. செந்திலைப் பிடிக்க முடியாம என் பையனை போலீஸ் சுட்டுக்கொன்னுடுச்சு. எங்க வீட்டுக்கெல்லாம் வந்தா அம்மா, பாட்டின்னு வீட்ல இருக்க எல்லாரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டுபோற போலீஸ், செந்தில் பொண்டாட்டியை ஏன் அரெஸ்ட் பண்ணல.
செந்தில் எல்லாருக்கும் பணம் கொடுத்து செட்டில் பண்ணிட்டான். நேத்து காலையில கூட எங்ககிட்ட போன்ல பேசுனான். தினமும் வேலூர் கோர்ட்டுக்குப் போய் கையெழுத்துப் போட்டுட்டு வரான். அவன் திருந்தி வாழ்ந்துட்டு இருந்தான். நேத்து மதியத்துக்கு மேல இருந்து அவன்கிட்ட எந்த போனும் இல்லை. நான் வக்கீலுக்குலாம் போன் பண்ணி பார்த்தேன். எதாவது கோயிலுக்குப் போயிருப்பான்னு சொன்னாங்க. ஆனா, போலீஸ் புடிச்சிட்டுப் போய் சுட்டுக்கொன்னுட்டாங்க. அவன்கிட்ட துப்பாக்கிலாம் இல்ல. போலீஸ் நாடகம் போடுறாங்க’’ என குற்றம் சாட்டினார்.
இதற்கிடையே சென்னை மாநகரக் காவல்துறையின் வடகுப்பிரிவு இணை ஆணையர் பர்வேஷ் குமார் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அவர் ''போலீஸ் வழக்கமாக வாகனச்சோதனை நடத்தினர். அப்போது ஒரு கார் நிற்காமல் போனபோது இன்ஸ்பெக்டர் சேஸ் செய்தார். இன்ஸ்பெக்டரை நோக்கி பாலாஜி துப்பாக்கியால் சுட, இன்ஸ்பெக்டர் திருப்பிச் சுட்டதில் அவர் பலியானர். சுட்டப்பின்னர்தான் அது காக்காதோப்பு பாலாஜி என்பதே தெரியும்'' என்று சொல்லியுள்ளார்.