அமெரிக்க தேர்தல் : போட்டியில் இருந்து விலகிய ஜோ பைடன்... கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக பரிந்துரை!
81 வயதான தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் என்பதில் இருந்து தன்னை விலக்கிக்கொண்டுள்ளார். ஏராளமான ஜனநாயகக் கட்சியின் முன்னணி தலைவர்கள் ஜோ பைடனால் டிரம்ப்பை எதிர்கொண்டு வெற்றிபெறமுடியாது எனத்தொடர்ந்து கருத்து தெரிவித்துவந்தநிலையில் இறுதியாக முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவும் ஜோ பைடனைப் போட்டியில் இருந்து விலகச் சொல்லி இருந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனாவைக் காரணம் காட்டி பிரசாரக் களத்தில் இருந்து ஜோ பைடன் ஒதுங்கும்போதே அவர் அதிபர் போட்டியில் இருந்து விலகிவிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்பு இந்திய நேரப்படி இன்று நள்ளிரவில் உறுதியாகியிருக்கிறது. இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவரும் தற்போதைய துணை அதிபருமான கமலா ஹாரிஸை அதிபர் வேட்பாளராக முன்மொழிந்திருக்கிறார் ஜோ பைடன்.
‘’அதிபர் தேர்தலுக்கான நியமனத்தை ஏற்க வேண்டாம் என்றும், மீதம் இருக்கும் எனது பதவிக் காலம் முழுவதும் ஜனாதிபதியாக எனது கடமைகளில் எனது முழு கவனத்தை செலுத்தவும் முடிவு செய்துள்ளேன். 2020 தேர்தலுக்கு முன்பாக நான் எடுத்த மிகச்சிறந்த முடிவு கமலா ஹாரிஸை எனக்குத் துணை அதிபர் வேட்பாளராகத் தேர்ந்தெடுத்ததுதான். இந்த ஆண்டும் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக கமலாவை முன்மொழிகிறேன். அவருக்கு எனது முழு ஆதரவையும் வழங்குகிறேன். ஜனநாயகவாதிகள் - ஒன்று கூடி டிரம்பை தோற்கடிக்க வேண்டிய நேரம் இது. இதை செய்வோம்’’ என பைடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.
பைடன் கமலா ஹாரிஸ் பெயரை முன்மொழிந்தாலும் இதை ஜனநாயகக் கட்சியினர் ஏற்றுகொள்ளவேண்டும். அதன்பிறகுதான் கமலா அதிகாரப்பூர்வமாக டிரம்பை எதிர்த்து போட்டியிடுவார். இதற்கிடையே கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராகும் நிலையில், ஜேடி வான்ஸை எதிர்த்து போட்டியிடப்போகும் ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் யார் என்கிற கேள்வியும் எழுந்திருக்கிறது.