கமலா ஹாரிஸ்
கமலா ஹாரிஸ்

கமலா ஹாரிஸ் மீது தொடரும் தனிமனித தாக்குதல்... ‘’குழந்தை பெறாதவர் ஜனாதிபதி ஆகக்கூடாது'’ என விமர்சனம்!

கட்சிக்குள் ஆதரவு பெருகிவரும் நிலையில் தற்போதைய துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார். இதற்கிடையே டிரம்ப் ஆதரவாளர்களால் சமூக வலைதளங்களில் தனிப்பட்ட முறையில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார் கமலா ஹாரிஸ்!
Published on

யார் இந்த கமலா ஹாரிஸ்?!

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் 1964-ம் ஆண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த சியாமளா என்பவருக்கும், அமெரிக்காவைச் சேர்ந்த டொனால்ட் ஹாரிஸ் என்பவருக்கும் மகளாகப் பிறந்தவர் கமலா ஹாரிஸ். இவரின் தாய் சியாமளா மேற்படிப்புக்காக தமிழ்நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு இடம்பெயர, அங்கே டொனால்ட் என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். 

கமலா ஹாரிஸ் ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் படிப்பை முடித்தவர். கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று வழக்கறிஞராகப் பணியாற்ற தொடங்கியவர் பின்னர் அரசியலுக்குள் நுழைந்தார். 2011-2017 காலகட்டத்தில் கலிஃபோர்னியா மாகாணத்தின் சட்ட அமைச்சராக இருந்தவர் 2017 செனட் தேர்தலில் வெற்றிபெற்று கலிஃபோர்னியாவின் செனட்டர் ஆனார். 2021 ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடனுடன் இணைந்து போட்டியிட்டு துணை ஜனாதிபதியாக வென்றார். அமெரிக்க வரலாற்றில் துணை ஜனாதிபதியான முதல் பெண் கமலா ஹாரிஸ்தான். இதுவரை அமெரிக்க வரலாற்றில் பெண்கள் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி என்கிற உயர் பதவிக்கு வந்ததில்லை என்கிற வழக்கத்தை உடைத்தவர் கமலா. 

கமலா ஹாரிஸ், ஜோ பைடன்
கமலா ஹாரிஸ், ஜோ பைடன்

கமலா Vs டிரம்ப்
தற்போது டிரம்ப்புடன் கிட்டத்தட்ட கமலா ஹாரிஸ் மோதுவது முடிவுசெய்யப்பட்டுவிட்டது. 2017 தேர்தலிலும் டிரம்ப் ஹிலாரி கிளண்டன் எனும் பெண் வேட்பாளருடன்தான் மோதினார். 2024 தேர்தலிலும் பெண் வேட்பாளருடன்தான் மோதுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே கமலா ஹாரிஸ் மீது பர்சனல் தாக்குதல் அதிகரிக்க ஆரம்பித்திருக்கின்றன. அமெரிக்காவின் பெரும் தொழிலதிபரான எலான் மஸ்க் தொடங்கி பல்வேறு தரப்பினரும் கமலா ஹாரிஸை தனிப்பட்ட முறையில் தாக்கி விமர்சித்துவருகிறார்கள். மனநலம் சரியில்லாதவர், பொது இடங்களில் எப்படி பேசுவது எனத்தெரியாதவர், எப்படி நடந்துகொள்ளவேண்டும் எனத் தெரியாதவர் என அவர்மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. 

கணவர் டக்ளஸ் மற்றும் மகன், மகளுடன் கமலா ஹாரிஸ்
கணவர் டக்ளஸ் மற்றும் மகன், மகளுடன் கமலா ஹாரிஸ்

திருமணம் & குழந்தைகள்!

கமலா ஹாரிஸ் தனது 40-வது வயதில் அதாவது 2014-ம் ஆண்டில் டக்லஸ் எம்ஹோப் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இது டக்ளஸுக்கு இரண்டாவது  திருமணம். டக்ளஸும் வழக்கறிஞர். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். ஆனால், மூவருமே டக்ளசின் முதல் மனைவிக்குப் பிறந்தவர்கள். கமலா ஹாரிஸ் குழந்தைகள் பெற்றுக்கொள்ளவில்லை. இந்நிலையில் ‘’கமலா ஹாரிஸ் ஜனாதிபதி ஆகக்கூடாது எனச்சொல்வதற்கு சிம்பிள் காரணம்… அவருக்கு குழந்தைகள் இல்லை. ஒரு வளர்ப்புத்தாய்க்கு பெற்றோர் மற்றும் குடும்பஸ்தர்களின் பிரச்சனை அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாகத் தெரியாது’’ என ஒருவர் சமூகவலைதளத்தில் எழுத, அதற்கு ஆயிரக்கணக்கில் லைக்ஸும், கமென்ட்ஸும் குவிந்திருக்கிறது. பிரபலமானவர்கள் பலருமே இந்தக் கருத்துக்கு லைக் பட்டனை அழுத்த இதுமிகப்பெரிய விவாதமாகியிருக்கிறது. 

‘’அமெரிக்கா எவ்வளவு முன்னேறிய நாடாக இருந்தாலும் இன்னமும் பெண்கள் உயர்பதவிகளுக்கு வரமுடியாததற்கு காரணம் இதுபோன்ற தனிமனித தாக்குதல்கள்தான்’’ எனப்பலரும் இந்த கருத்தை விமர்சித்திருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com