சினிமாவில் இருந்து அரசியலுக்கு வரும் AI... திமுக பவளவிழாவில் கருணாநிதி பேசுகிறார்?!
திமுகவின் பவள விழா மற்றும் முப்பெரும் விழா இன்று சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இவ்விழாவில் பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் பெயர்களிலான விருதுகள் மற்றும் கட்சியில் சிறப்பாக செயல்படுவோருக்கான பரிசுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கவுள்ளார்.
பேரறிஞர் அண்ணா பிறந்த தினமான செப்டம்பர் 15-ம் தேதி, தந்தை பெரியார் பிறந்த தினமான செப்டம்பர் 17-ம் தேதி, அதே செப்டம்பர் 17-ம் தேதியில் தொடங்ப்பட்டதுதான் திராவிட முன்னெற்ற கழகம். இவை மூன்றையும் இணைக்கும் வகையில் ஆண்டுதோறும் முப்பெரும் விழா திமுக சார்பில் மிக விமர்சையாக கொண்டாடப்படிகிறது. 2024-ஆம் ஆண்டோடு திமுக தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததன் காரணமாக பவளவிழா ஆண்டாக இன்று கொண்டாடப்படுகிறது.
இந்த விழாவின் சிறப்பம்சமாக ஏ.ஐ.தொழில்நுட்பம் மூலம் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி வாழ்த்துரை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவள் வெளியாகியுள்ளது. இதுவரையில் சினிமா துறையில் மட்டுமே இதுபோன்று ஏ.ஐ.தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருக்கின்றனர். சமீபத்தில் நடிகர் விஜய்யின் 'GOAT' திரைப்படித்தில் ஏ.ஐ.தொழில்நுட்பத்தின் மூலம் மறைந்த நடிகர் விஜயகாந்த்தை மீட்டுருவாக்கம் செய்திருப்பார்கள். அதேப்போல் தற்போது திமுக நடத்தும் முப்பெரும் விழா மற்றும் பவள விழா மேடையிலும் ஏ.ஐ.தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கலைஞர் கருணாநிதி வாழ்த்துரை வழங்குவதுபோல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று மாலை 5 மணிக்கு சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் விழாவுக்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமை தாங்குகிறார். இவ்விழாவில் பெரியார் விருதை பாப்பம்மாளுக்கும், அண்ணா விருது-அறந்தாங்கி மிசா ராமநாதனுக்கும், கலைஞர் விருது- ஜெகத்ரட்சகனுக்கும், பாவேந்தர் விருது - கவிஞர் தமிழ்தாசனுக்கும், பேராசிரியர் விருது- வி.பி.ராஜனுக்கும் முதல்வர் ஸ்டாலின் வழங்குகின்றார். இதேபோல் பவளவிழா ஆண்டில் புதிதாக மு.க.ஸ்டாலின் பெயரிலும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலின் விருதை எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இருந்து பெருகிறார்.
தமிழகம் முழுவதும் இருந்தும் தொண்டர்கள் பங்கேற்கும் வகையில், முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் அமரும் வகையில், பிரம்மாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அனைவரும் விழாவை முழுமையாக காணும் வகையில் பெரிய அளவிலான டிஜிட்டல் திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. 75 அடி உயர கொடி கம்பத்தில் கட்சி கொடியை முதல்வர் ஸ்டாலின் ஏற்றுகிறார். விழா நடைபெறும் வளாகத்தில் 75 ஆண்டு திமுக வரலாற்றை விளக்கும் வகையில் 100 அடி கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது.