ஆர்ம்ஸ்ட்ராங் : ‘’ஹத்தாரஸில் நடந்தது இங்கேயும் நடக்கலாம்...சட்டத்தை மாற்ற முடியாது!’’ - நீதிபதி!
ஆர்ம்ஸ்ட்ராங்கின் உடலை பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் அலுவலகத்தில் புதைக்க வேண்டும் என்கிற வழக்கு இன்று கால அவசர வழக்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி பவானி சுப்பராயன் இந்த வழக்கை விசாரித்தார்.
ஆர்ம்ஸ்ட்ராங்கின் மனைவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சந்திரசுப்பு பகுஜன் சமாஜ்வாதி கட்சி அலுவலகம் அமைந்திருக்கும் 2600 சதுர அடி நிலமும் கட்சிக்கு முழுக்க சொந்தமானது. அதனால் அங்கே அவரது உடலை புதைக்க அனுமதிக்கவேண்டும் என வாதாடினார். அதற்கு அரசு சார்பில் ஆஜரான ரவீந்திரன் எதிர்ப்புத் தெரிவித்தார். ‘’கட்சி அலுவலகம் அமைந்திருக்கும் இடம் குடியுருப்பு பகுதியில் அமைந்திருக்கிறது. அதோடு மிகவும் குறுகலான சாலைகளைக் கொண்ட இடம் அது. அங்கே மக்கள் அதிக அளவில் கூடவும் முடியாது. போக்குவரத்துக்கும் இடையூறாக இருக்கும்'’ என்றார். மேலும் தமிழக அரசின் சார்பில் பகுஜன் சமாஜ்வாதி கட்சி அமைந்திருக்கும் அலுவலகம் மற்றும் அந்த சாலையின் படங்கள் நீதிபதிக்கு காட்டப்பட்டது. அதன்பிறகு நீதிபதி தனது குறிப்புகளைப் பேசத்தொடங்கினார்.
‘’இதை நான் நீதிபதியாக சொல்லாமல் ஒரு சகோதரியாக சொல்கிறேன். ஆர்ம்ஸ்ட்ராங்கை நானும் இந்த வளாகத்தில் நிறையமுறை பார்த்திருக்கிறேன். அவரது மரணத்துக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். ஆனால், உத்திரபிரதேச மாநிலம் ஹத்தாரஸில் நடந்த விபத்தை நாம் எல்லோரும் பார்த்திருக்கிறோம். குறுகிய சாலையில் புதைக்கவும், மக்கள் கூடவும் அனுமதித்தால் அது பெரிய பிரச்சனையாகப் போய் முடியும். அதனால் இப்போதைக்கு தமிழக அரசு சொல்லும் இடத்தில் புதையுங்கள். பின்னர் ஒரு பெரிய இடத்தை நீங்கள் வாங்கி அங்கே ஆர்ம்ஸ்ட்ராங்கின் உடலைகொண்டு போய் நினைவாலயம் எழுப்பலாம். இரண்டு நாட்களான பின்னரும் உடலை அப்படியே வைத்திருப்பது சரியான அணுகுமுறை இல்லை’’ என்று நீதிபதி பேசினார்.
அதோடு மதியம் 12 மணி வரை இருதரப்பும் ஒரு இடத்தை தேர்வு செய்து சொல்லுமாறு உத்தரவிட்டிருக்கிறார் நீதிபதி!