குஜராத்தில் தொடரும் கனமழையால் பெரும் வெள்ளம்... பலியானோர் என்னிக்கை 28-ஆக உயர்வு!
குஜராத் மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், எங்கும் வெள்ளநீர் பெருக்கெடுத்து பாய்வதால் ரயில் மற்றும் சாலை போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது. அணைகள், ஏரிகள் நிரம்பி வழிவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சுவர் இடிந்து விழுந்தும், மழை வெள்ளத்தில் மூழ்கியும் பலர் பலியாகியுள்ளனர்.
மீட்புப் பணிகள் மற்றும் வெளியேற்றப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கடந்த மூன்று நாட்களில் கொட்டி தீர்த்த கனமழையால் விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 23,000 பேர் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கச், துவாரகா, ஜாம்நகர், மோர்பி, சுரேந்திரநகர், ஜூனாகத், ராஜ்கோட், பொடாட், கிர்சோம்நாத், அம்ரேலி மற்றும் பாவ்நகர் ஆகிய 11 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், வடக்கு குஜராத், தெற்கு குஜராத் ஆகிய பகுதிகளுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப்படையினர், ராணுவத்தினர், விமானப்படையினர், கடலோர காவல்படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.