திமுக அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் மகன்கள் மீது 411 கோடி நில அபகரிப்பு புகார்!
அறப்போர் இயக்கம், இன்று சென்னை ஜிஎஸ்டி சாலையில் உள்ள 411 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை அபகரித்ததாக அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் அவரது மூன்று மகன்கள் மீது புகார் அளித்துள்ளது. இந்த புகார் லஞ்ச ஒழிப்பு துறை, முதல்வர், துணை முதல்வர், தலைமைச் செயலர், வருவாய் துறை அமைச்சர் மற்றும் வருவாய் துறை செயலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அமைச்சரவையில் பால்வளம் மற்றும் பால் பண்ணை வளர்ச்சி, கதர் மற்றும் கிராமத் தொழில் வாரியத்துறைகளுக்கான அமைச்சராக இருப்பவர் ராஜ கண்ணப்பன். இவர் மீதும் இவரின் மகன்களின் மீதும்தான் தற்போது அறப்போர் இயக்கம் நில ஆக்கிரமிப்பு புகாரை அளித்துள்ளது.
புகாரின் அடிப்படையில், சென்னை ஜிஎஸ்டி சாலையில் உள்ள பரங்கிமலையில் சர்வே எண் 1353 மற்றும் 1352 ஆகியவற்றின் கீழ் 4.75 ஏக்கர் அரசு நிலத்தை டெக்கான் ஃபன் ஐலேண்ட் அண்ட் ஹோட்டல்ஸ் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் மூலம் அமைச்சர் ராஜகண்ணப்பனின் மகன்கள் அபகரித்துள்ளனர். இந்நிறுவனத்தின் இயக்குனர்கள் மற்றும் பங்குதாரர்களாக உள்ளவர்கள் ராஜ கண்ணப்பனின் மகன்கள் பிரபு, திவாகர், மற்றும் திலீப் குமார் என அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது.
புகாரில் 2015-ம் ஆண்டில் ஆலந்தூர் தாசில்தார் எழுதிய கடிதம் மற்றும் வருவாய்த்துறை பதிவேட்டின் நகல்கள் இணைக்கப்பட்டுள்ளன. அந்த கடிதத்தில், இந்த நிலங்கள் அரசின் காலம் கடந்த குத்தகை நிலங்கள் என்றும், அவற்றின் பத்திரப்பதிவுகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், அந்த பத்திரப்பதிவுகள் ரத்து செய்யப்படவில்லை, மேலும் 2018-ம் ஆண்டிலும் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு வைத்துள்ளது.
அரசின் வழிகாட்டி மதிப்பின்படி, இந்த நிலத்தின் மதிப்பு ஒரு சதுர அடிக்கு ரூ. 11,000 ஆகும். அதாவது மொத்த மதிப்பு ரூ. 226 கோடி. ஆனால், சந்தை மதிப்பின்படி இதன் மதிப்பு ரூ. 411 கோடி என அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது.
அறப்போர் இயக்கம், இந்த நிலம் உடனடியாக மீட்கப்பட வேண்டும் என்றும், அமைச்சர் ராஜகண்ணப்பன், அவரது மகன்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகள் மீதும் FIR பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரியுள்ளது.