ராகுல் காந்தி உயிருக்கு அச்சுறுத்தல்... மிரட்டும் பாஜகவினருக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
சமீபத்தில் ராகுல் காந்தி அமெரிக்காவில் பேசிய கருத்துகளுக்கு கண்டனம் தெரிவித்த பாஜக பிரமுகர் தர்வீந்தர் சிங், "ராகுல் காந்தி, இதுபோன்ற செயல்களில் இருந்து விலகி இருங்கள், இல்லையெனில் வரும் காலத்தில் உங்கள் பாட்டி இந்திரா காந்திக்கு ஏற்பட்ட நிலமை உங்களுக்கும் ஏற்படும்" என மிரட்டியது சர்ச்சைக்குள்ளானது.
அதைதொடர்ந்து, மகாராஷ்டிராவில் ஆளுகின்ற ஷிண்டே சேனா கட்சியின் எம்எல்ஏ சஞ்சேய் கெயிக்வாட், "ராகுல் காந்தியின் நாக்கை அறுத்து வருவோருக்கு 11 லட்சம் சன்மானம் வழங்கப்படும்" என்று அறிவித்ததோடு கொச்சையான விமர்சனங்களையும் அச்சுறுத்தல்களையும் கொடுத்துள்ளார்.
ராகுல் காந்திக்கு வந்த மிரட்டலை சுட்டிக் காட்டியுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், பாஜக தலைவர் ஒருவர் '' 'ராகுல் காந்தி அவர்களின் பாட்டிக்கு நேர்ந்தது போல் அவருக்கும் நேரும்' எனவும், ஷிண்டே சேனாவின் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் 'ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவருக்குப் பரிசு' எனவும், மிரட்டல் விடுத்திருப்பதாக ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றது'' என தெரிவித்தார்.
மேலும், ''ராகுல் காந்திக்கு நாளுக்கு நாள் கூடி வரும் பொதுமக்களின் ஆதரவு பலரையும் மிரளச் செய்துள்ளதன் தொடர்ச்சியாகவே இத்தகைய அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகிறது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, அச்சுறுத்தலுக்கும் வன்முறைக்கும் மக்களாட்சியில் இடமில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.