மோடியின் உக்ரைன் பயணமும், காரணமும்... ரஷ்ய எதிர்ப்பா, உக்ரைன் ஆதரவா?!
ரஷ்யா - உக்ரைன் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் மோடியின் உக்ரைன் பயணம் உலக அரங்கில் மற்ற நாடுகளால் உற்று நோக்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று (ஆகஸ்ட் 23) உக்ரைனின் அண்டை நாடான போலந்தில் இருந்து ரயில் மார்க்கமாக உக்ரைனின் தலைநகரான கீவ் வந்தடைந்தார். ஒரு நாட்டின் தலைவர் இவ்வாறு மற்றொரு நாட்டுக்கு ரயிலில் செல்வது இன்றைய காலகட்டத்தில் அசாதாரணமான போக்குவரத்து முறையாகும்.
ரஷ்யா பிப்ரவரி 2022-ல் உக்ரைனில் படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து உக்ரைனிய வான்வெளி மூடப்பட்டுள்ளது. வான்வழி போக்குவரத்துகள் தடை செய்யப்பட்டுள்ளது.
உக்ரைன் நாட்டு அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, வெளிநாடுகளுக்கு அரசுமுறை பயணம் செல்கையில் உக்ரைனில் இருந்து வெளியேற ரயில் மூலமாகவே பயணம் செய்கிறார்.
கடந்த சில வருடங்களில் அந்நாட்டுக்கு சென்ற அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் போன்ற உலகத் தலைவர்கள் ரயிலையே பயன்படுத்தினர். தற்போது மோடியும் போலந்தில் இருந்து ரயில் மூலம் உக்ரைன் சென்றுள்ளார்.
போலந்தில் இருந்து உக்ரைனுக்கு உலகத் தலைவர்கள் பயணிக்கும் அந்த ரயிலின் பெயர் `Rail Force One' . உக்ரைனின் ரயில் போக்குவரத்து பல்வேறு நாடுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து ரயில் போக்குவரத்து மூலம் மால்டோவா, போலந்து, ரஷ்யா, ருமேனியா உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. போர் சூழலால் ரஷ்யா உடனான ரயில் இணைப்பு மட்டும் துண்டிக்கப்பட்டுள்ளது.
மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பயணித்த `Rail Force One' சொகுசு ரயில் ஆரம்பத்தில் சுற்றுலா பயணிகளுக்காக உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் உக்ரைனுக்கு வரும் முக்கிய பிரமுகர்கள், உலகத் தலைவர்களுக்காக மறுவடிவமைப்பு செய்யப்பட்டு பாதுகாப்பு, தங்கும் வசதி உள்ளிட்டவை உலகத் தரத்தில் மேம்படுத்தப்பட்டது.
பிரதமர் மோடி போலந்தில் இருந்து சுமார் 15 மணி நேரத்துக்கு மேல் பயணம் செய்து உக்ரைன் தலைநகர் கீவ் வந்தடைந்தார். அவரை உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நேரில் சென்று வரவேற்றார்.
1991-ம் ஆண்டு சோவியத் யூனியனில் இருந்து சுதந்திரம் பெற்ற பின்னர், இந்தியப் பிரதமர் ஒருவர் உக்ரைனில் கால்பதிப்பது இதுவே முதல்முறை.
வெள்ளிக்கிழமையன்று அதிபர் ஜனாதிபதி மாளிகையில் அவர்கள் பேச்சுக்களை தொடங்குவதற்கு முன், ஜெலென்ஸ்கி மோடியைத் ஆரத் தழுவிக் கொண்டார். இந்தியத் தலைவரின் உக்ரைன் பயணம் மிகவும் நட்பு ரீதியானது மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்கது என்றார்.
பொருளாதார உறவுகள், பாதுகாப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இருநாட்டு ஒத்துழைப்பைப் பற்றி மோடி பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான தீர்வு பற்றிய விஷயத்தையும் பேசுவார்.
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடக்கும் போரின் போது கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான உக்ரேனிய குழந்தைகளை நினைவு கூறும் நினைவிடத்திற்கு இரு தலைவர்களும் சென்று அஞ்சலி செலுத்தினர்.
ரஷ்ய ஆக்கிரமிப்பால் கொல்லப்பட்ட குழந்தைகளின் நினைவிடத்துக்கு தானும் மோடியும் சென்று அஞ்சலி செலுத்தியதாக உக்ரைன் அதிபர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
மோதலில் குழந்தைகள் கொல்லப்படுவதை ஏற்க முடியாது என்று ஜெலென்ஸ்கியிடம் கூறிய மோடி, அமைதிக்கான ஒரு செய்தியுடன் தான் உக்ரைனுக்கு வந்திருப்பதாக கூறினார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய மோடி “நாங்கள் (இந்தியா) போர் விவகாரங்களில் இருந்து விலகியுள்ளோம். அது நாங்கள் அலட்சியமாக இருக்கிறோம் என்று அர்த்தமில்லை ”என்று கூறினார். அவருடன் ஜெலென்ஸ்கியும் அமர்ந்திருந்தார்.
"நாங்கள் போர் சூழலில் நடுநிலை வகிக்கவில்லை. நாங்கள் ஒரு பக்கத்தை எடுத்துள்ளோம், நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே அமைதியை வலியுறுத்துகிறோம்” என்று அவர் கூறினார்.
உக்ரைனுக்கு இந்தியா மனிதாபிமான ஆதரவை வழங்கும் என்றும் மோடி உறுதியளித்தார். "இந்தியா எப்போதும் உங்களுடன் நிற்கும். மேலும் உங்களுக்கு ஆதரவாக மேலே செல்லும்" என்று கூறினார்.