ஆர்எஸ்எஸ் அமைப்பில் அரசு ஊழியர்கள் சேரலாம், பங்கேற்கலாம்… 58 ஆண்டுகாலத் தடையை நீக்கிய மோடி அரசு!
மக்களவை பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று கூடியிருக்கும் நிலையில் மத்திய அரசின் உத்தரவு நாடாளுமன்றத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்த இருக்கிறது. ஜூலை 21-ம் தேதியான நேற்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் அவரது அதிகாரப்பூர்வ சமூக வலைதளத்தில் மத்திய அரசு வெளியிட்டிருக்கும் அரசாணையை வெளியிட்டு கேள்வி எழுப்பியபோதுதான் இப்படி ஒரு உத்தரவு வெளியாகியிருப்பது எல்லோரது கவனத்துக்கும் வந்தது.
“சர்தார் வல்லபாய் படேல் உள்துறை அமைச்சராக இருந்தபோது மகாத்மா காந்தியடிகளின் படுகொலையைத் தொடர்ந்து 1948 பிப்ரவரியில் ஆர்எஸ்எஸ் அமைப்பைத் தடை செய்தார். பின்னர் நற்செயல்களில் ஈடுபடுவோம் என வாக்குறுதி அளித்தநிலையில் இந்த தடை நீக்கப்பட்டபோதும் நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் இந்திய தேசியக் கொடி பறக்கவே இல்லை. தேசிய கீதம் அங்கே பாடப்படவில்லை. இதனைத்தொடர்ந்து 1966ல், ஆர்எஸ்எஸ் நடவடிக்கைகளில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது கூட நடைமுறையில் இருந்த இந்த 58 ஆண்டுகால தடை இப்போது முறையான அறிவிப்பு எதுவும் இல்லாமல் நீக்கப்பட்டிருக்கிறது’’ என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
இது நாடு முழுக்க பரவி பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் மக்களிடையே விமர்சனங்களை எழுப்பியிருக்கிறது. ஐதராபாத் எம்பியும், AIMIM கட்சியின் தலைவருமான அசாதிதின் ஓவைசி இந்த உத்தரவு குறித்து பேசும்போது, ‘’இந்த உத்தரவு உண்மையாக இருந்தால் அது இந்தியாவின் ஒருமைப்பாடு மற்றும் ஒற்றுமைக்கு எதிரானது. இந்திய அரசியலமைப்புச் சட்டம், தேசியக் கொடி மற்றும் தேசிய கீதத்தை ஏற்க மறுத்ததால்தான் ஆர்எஸ்எஸ் மீதான தடை போடப்பட்டது. அப்படிப்பட்ட அமைப்பைச் சேர்ந்தவர் அரசு ஊழியராக இருந்தால் அவர் எப்படி நாட்டுக்கு விசுவாசமாக இருக்க முடியும்” என்று கேள்வி எழுப்பினார்.
‘’தேர்தல் ஆணையம், சிபிஐ உள்ளிட்ட மத்திய புலனாய்வுப் பிரிவுகள், வருமான வரித்துறையில் சேரும் அல்லது முக்கிய பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் இனி ஆர்எஸ்எஸ் சான்றிதழைக் காண்பித்தால்போதும் அவர்களுக்கு எல்லா அதிகாரங்களும், பொறுப்புகளும் வழங்கப்படும்'’ என விமர்சித்துள்ளார் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சியின் எம்பி பிரியங்கா சதுர்வேதி.
முன்னாள் உத்தரப்பிரதேச முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி, ‘’மத்திய அரசின் இந்த முடிவு அரசியல் உள்நோக்கம் கொண்டது. 2024 தேர்தலுக்குப் பிறகு மோடியை கடுமையாக விமர்சித்துவரும் ஆர்எஸ்எஸ் தலைவர்களை திருப்பதிப்படுத்தவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது’’ என்று விமர்சனம் செய்திருக்கிறார்.
பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மாளவியா, ‘’அரசியலமைப்புக்கு எதிராக 58 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட உத்தரவை மோடி அரசு திரும்பப் பெற்றுள்ளது. இந்திரா காந்தி ஆர்எஸ்எஸ்-ன் வளர்ச்சி பொறுக்காமல் அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேருவதற்கு தடை விதித்தார். உள்நோக்கம் கொண்ட அவரது உத்தரவு இப்போது அப்புறப்படுத்தப்பட்டிருக்கிறது’’ என்று மோடி அரசின் சாதனை எனப் பதிவை வெளியிட்டிருக்கிறார்.
பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆர்எஸ்எஸ் பிரச்சனை பல புயல்களை கிளப்பும் என எதிர்பார்க்கலாம்!