ராகுல் காந்தியுடனான சிறு வயது நினைவுகள்... அண்ணனுக்கு வாழ்த்து சொன்ன அன்பு தங்கை பிரியங்கா காந்தி!
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சமூக ஊடக தளமான X-ல் ரக்ஷா பந்தன் பண்டிகைக்கான வாழ்த்துக்களை தெரிவித்தார். ''சகோதர சகோதரிகளுக்கு இடையிலான அன்பு என்பது உடைக்க முடியாத அன்பு'' என்று நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டார்.
ராகுல் தனது சகோதரி பிரியங்கா காந்தி வத்ராவின் படத்தைப் பகிர்ந்து, "சகோதரன் மற்றும் சகோதரிகளுக்கு இடையேயான அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்தும் ரக்ஷா பந்தன் பண்டிகைக்கு நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்த பாதுகாப்பு நூல் எப்போதும் உங்கள் புனிதமான உறவை வலுவாக வைத்திருக்கட்டும்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி வத்ராவும் ரக்ஷா பந்தனை உன்னிட்டு ராகுல் காந்தியுடனான குழந்தைப் பருவப் படங்களுடன் இதயப்பூர்வமான பதிவைப் பகிர்ந்துள்ளார். அவர் தனது பதிவில், “ஒரு சகோதரனுக்கும் சகோதரிக்கும் இடையிலான உறவு ஒரு பூச்செடி போன்றது. அதில் வெவ்வேறு வண்ணங்களின் நினைவுகள், ஒற்றுமை, மரியாதை, அன்பு மற்றும் பரஸ்பர புரிதலின் அடித்தளத்தில் நட்பை ஆழமாக்குவதற்கான உறுதிப்பாடு ஆகியவை செழித்து வளரும்” என்றார்.
மேலும் அவர், ரக்ஷா பந்தனின் போது, சகோதரிகள் தங்கள் சகோதரனின் கைகளில் ஒரு புனித நூலை (ராக்கி) கட்டி, தங்களுடைய பந்தத்தையும், தங்கையைப் பாதுகாப்பதற்கான சகோதரரின் சபதத்தையும் அடையாளப்படுத்துகிறார்கள் என்று ரக்ஷா பந்தன் பண்டிகையை குறிப்பிட்டார்.