உலகை அச்சுறுத்தும் குரங்கு அம்மை… உயிர் கொல்லியா இந்த MPOX… தற்காப்பது எப்படி?!
MPOX என சொல்லப்படும் குரங்கு அம்மை வைரஸ் நோய் வேகமாக பரவிவருவதால் உலக சுகாதார அமைப்பு அவசர எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இரண்டாவது முறையாக ஆப்ரிக்கா முழுவதும் இந்த குரங்கு அம்மை நோய் பரவி, தற்போது உலகம் முழுக்க பரவ ஆரம்பித்திருக்கிறது.
குரங்கு அம்மை என்றால் என்ன?
குரங்கு அம்மை என்று சொல்லப்படும் Mpox என்பது ஒருவகை வைரஸ் தொற்று. இது விலங்குகள் மூலம் மனிதர்களுக்குப் பரவுகிறது. இந்த வைரஸ், பாக்ஸ் என சொல்லப்படும் அம்மை நோய் அதாவது தோலில் கொப்புளங்கள், சீழ் கட்டிகளை உருவாக்கும். 2- 4 வாரங்களில் குணமாகும் இந்த நோய் சிலருக்கு உயிர்க்கொல்லியாக மாறும் வாய்ப்பும் அதிகம்.
எம்பாக்ஸ் வைரஸ் பாதிக்கப்பட்ட விலங்கு அல்லது மனிதருடன் நெருங்கிய உடல் தொடர்பு வைத்துக்கொள்வதன் மூலம் பரவுகிறது. இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட நபரின் தோல் புண்கள், உடல் திரவங்கள் அல்லது எச்சில்கள் மூலம் இது மற்றொருவருக்குப் பரவும்.
MPOX நோயைக் கண்டறிவது எப்படி?
காய்ச்சல், தலைவலி, தசைவலி மற்றும் முகம், கைகள், கால்கள் மற்றும் உடலின் பிற பகுதிகளில் தோன்றும் ஒரு தனித்துவமான கொப்புளங்கள் ஆகியவையே இந்த நோய்க்கான அறிகுறிகள்.
MPOX ஆபத்தா?
Mpox நோய் இதுவரை இந்தியாவில் கண்டறியப்படவில்லை. ஆனால், கொரோனா போன்று தொற்றுவியாதியாக மாறக்கூடிய வாய்ப்பு இருப்பதால் உலக சுகாதார மையம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது!