ஜோ பைடனை விலகச் சொல்லும் பராக் ஒபாமா… ஜனநாயகக் கட்சியின் புதிய ஜனாதிபதி வேட்பாளர் யார்?
டொனால்ட் டிரம்ப் மீதான படுகொலைத்தாக்குதல், ஜோ பைடனின் உளறல், தீவிர பிரசாரம் என 2024 அமெரிக்க தேர்தல் மிகவும் பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்களே இருப்பதால் குடியரசுக் கட்சி டிரம்ப்பை ஜனாதிபதி வேட்பாளாராகவும், ஜே.டி.வான்ஸ் எனும் செனட்டரை துணை ஜனாதிபதி வேட்பாளராகவும் அறிவித்துவிட்டது.
ஆனால், தற்போது ஆட்சியில் இருக்கும் ஜனநாயகக் கட்சியோ மிகப்பெரிய குழப்பத்தில் இருக்கிறது. 81 வயதான தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன் என அடம்பிடிக்க, அவரது வயது மற்றும் எதிராளியான ட்ரம்ப்பின் பலம் ஆகியவற்றை வைத்து ஜனநாயகக் கட்சியினர் அவரை போட்டியில் இருந்து விலகச்சொல்லி வற்புறுத்திவருகின்றனர். முன்னாள் சபாநாயகரும், ஜனநாயகக் கட்சியின் மூத்த தலைவருமான நான்சி பெலோசி பைடனைத் தொடர்ந்து போட்டியில் இருந்து விலகச்சொல்லி வற்புறுத்திவருகிறார். இதற்கிடையே ஜனநாயகக் கட்சிக்கான தேர்தல் நிதி திரட்டுபவர்களில் முக்கியமானவரான நடிகர் ஜார்ஜ் க்ளூனியும் வெளிப்படையாகவே ஜோ பைடன் போட்டியிட்டால் தோல்வி நிச்சயம் என அறிவித்துவிட்டார்.
இதற்கிடையே ஜோ பைடனுக்கு முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் ஆதரவுதான் இருந்தது. 2009 முதல் 2017 வரை பராக் ஒபமா அதிபராக இருந்தபோது அவருக்கு துணை அதிபராக இருந்தவர்தான் ஜோ பைடன். பின்னர் 2021 தேர்தலில் டிரம்பைத் தோற்கடித்து ஜனாதிபதியானார் பைடன்.
இந்தச்சூழலில் இவ்வளவு நாளாக பைடனுக்கு ஆதரவாக இருந்துவந்த பராக் ஒபாமாவே ஜோ பைடனிடம் போட்டியில் இருந்து விலகச் சொல்லியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பைடன் ஏற்கெனவே கொரொனாவைக் காரணம் காட்டி பிரசாரத்தில் இருந்து ஒதுங்கியிருக்கும் நிலையில் அப்படியே உடல்நலனைக் காரணம்காட்டி அவரை போட்டியில் இருந்து விலகச்சொல்லி அறிவிக்குமாறு ஒபாமா அறிவுறுத்தியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதனால் 2024 தேர்தலில் டிரம்ப்பையும், வான்ஸையும் எதிர்த்துப்போட்டியிடப்போகும் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்கள் யார் என்கிற கேள்வி எழுந்துள்ளது.