ஒரே நாடு, ஒரே தேர்தல் சட்டப் பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்… காங்கிரஸ் கடும் கண்டனம்!
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற முழக்கம் பாஜக அரசின் நீண்டகால அரசியல் இலக்குகளில் ஒன்றாக இருந்து வருகிறது. நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவதற்கான நோக்கத்துடன் இந்த திட்டம் முன்மொழியப்பட்டது.
சமீபத்தில் மத்திய அமைச்சரவை இந்த சட்டப்பரிந்துரைக்கு ஒப்புதல் அளித்திருப்பதால், வரும் குளிர்காலக் கூட்டத்தொடரில் பாராளுமன்றத்தில் இதற்கான சட்டமசோதா முன்வைக்கப்பட இருக்கிறது. இந்தியாவின் தேர்தல் முறையை மாற்றி அமைக்கும் இந்த சட்டப்பரிந்துரைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியங்கள் குறித்து குழு அமைத்து திட்ட அறிக்கையை தாக்கல் செய்யும் பொறுப்பை முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்திடம் கொடுத்திருந்தது மத்திய அரசு. கிட்டத்தட்ட ஒராண்டு காலம் இதன் சாத்தியங்கள் குறித்து ஆராய்ந்த ராம் நாத் கோவிந்த் தலைமையிலான உயர்நிலை குழு இந்தியாவின் பல்வேறு கட்சிகள் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை ஆதரிப்பதாகவும், இதை சட்டமாக அமல்படுத்தலாம் என்றும் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. இந்த திட்டத்துக்கு இன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது.
மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ‘’பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் இந்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு, இது நிறைவேற்றப்பட்டால், இந்திய தேர்தல் வரலாற்றில் முக்கியமான திருப்பமாக அமையும்’’ என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் தேர்தல் செலவுகளை குறைப்பதோடு, தேர்தல் நடைமுறையில் உள்ள தேவையற்ற சிக்கல்களையும் சரிசெய்யும் என்று முன்னரே பேசியிருக்கிறார். இந்த சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறினால் முதல் கட்டமாக மக்களவை மற்றும் சட்டசபை தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்தப்படும். பின்னர், உள்ளாட்சி தேர்தல்களும் இவற்றோடு இணைக்கப்படும் எனத்தெரிகிறது.
ஆனால், இந்த சட்டப்பரிந்துரைக்கு காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ‘’இந்த திட்டம் ஜனநாயகத்தின் மீதான அச்சுறுத்தல்’’ என விமர்சனம் செய்துள்ளார்.
ராம்நாத் கோவிந்த் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் 18 அரசியல் திருத்தங்கள் செய்யப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.