தாலிபான்களுடன் Vlog வெளியிட்ட இன்ஸ்டா பிரபலம் மரியன் அப்டி... தீவிரவாதிகளின் ரசிகை என விமர்சனம்!
கீன்யாடா மடோவ் (Geenyada Madow) என்ற பெயரில் சமூக ஊடகங்களில் இயங்கி வரும் மரியன் அப்டி, சோமாலியா-அமெரிக்க பெண். இவர் உலகின் ஆபத்தான நாடுகள் என்று கருதப்படும் நாடுகளுக்கு சென்று அவற்றின் இன்னொரு முகத்தை மக்களுக்கு காட்டுவதை நோக்கமாக கொண்டிருக்கிறார்.
ஆப்ரிக்க நாடுகள், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்கு சென்று அங்கிருக்கும் மக்களின் அழகான வாழ்வியலை நேர்மறையாக காட்டி வருகிறார்.
சமீபத்தில் ஆப்கானிஸ்தானுக்கு சென்றிருந்த மரியன் அப்டி சமூக ஊடகங்களில் பெரும் பிரச்னைகளை எதிர்கொண்டார். AK-47 ஆயுதம் ஏந்திய தாலிபான்களுடன் சிரித்து கொண்டே மரியன் அப்டி போஸ் கொடுத்து, தன் சமூக ஊடகத்தில் புகைபடங்களை பதிவிட்டார். தாலிபான் வீரர்களுடன் கலந்துரையாடிய வீடியோவை தன் யூடியூபில் வெளியிட்டார். இது அவரை பின்தொடரும் பெரும்பாலான இணையவாசிகளுக்குப் பிடிக்கவில்லை.
இந்த விவகாரம் பூதாகரம் ஆகி அமெரிக்காவை அடிப்படையாக கொண்டு இயங்கும் ஊடகங்கள் மரியன் அப்டியை காட்டமாக விமர்சித்து செய்திகள் வெளியிட்டன. எதிர்வினைகள் குறித்து தன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட மரியன் “ எனக்கு தாலிபான்கள் ஆட்சி மீது கருத்து வேறுபாடுகள் உள்ளது. ஆனால் நான் அவர்களை சந்தித்த போது என்னை வரவேற்று மரியாதையுடன் நடத்தினர்.
இதனை மேற்குலக ஊடகங்கள் இவ்வளவு விமர்சிக்க வேண்டிய அவசியமில்லை. என் ஆப்கானிஸ்தான் பயணத்தை குறிப்பிட்டு நான் தீவிரவாதத்துக்கு ஆதரவு கொடுப்பதாக பொய் செய்தி வெளியிட்டுள்ளனர். அது பொய். நான் சமூக ஊடகங்களில் சம்பாதிக்க இதுபோன்று வீடியோக்கள் பதிவிடுவதாக சிலர் சொல்கின்றனர்.
நான் ஆப்கானிஸ்தான் செல்வதற்கு முன்னரே என்னை மில்லியன் கணக்கானோர் பின் தொடர்கின்றனர். புகழுக்காகவோ பணத்துக்காகவோ இதை நான் செய்யவில்லை” என்று பதில் அளித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆப்கானிதானை ஆளும் தாலிபான் அரசாங்கம் பெண்களின் சுதந்திரத்தை பறிக்கும் பல்வேறு சட்டங்களை செயல்படுத்தியது. இந்த சூழலில் ஒரு பெண் பிரபலம் ஆயுதம் ஏந்திய தாலிபான் வீரர்களுடன் ஜாலியாக உரையாடி விடியோ வெளியிட்டுள்ளது சர்வதேச அளவில் எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது. தீவிரவாதிகளுடன் “Fangirl moment” கொண்டாடுவதாக விமர்சித்து வருகின்றனர்.