புதினுக்குப் பின்னடைவு... ரஷ்யாவுக்குள் அதிரடியாய் நுழைந்து இடங்களைக் கைப்பற்றும் உக்ரைன்!
''ஒரு சில நாட்களில் கதையை முடித்துவிடுவேன்'' என உக்ரைனுடனான நேரடிப்போரை அறிவிக்கும்போது சொன்னார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின். ஆனால், உக்ரைனுடனான யுத்தம் ஆரம்பித்து இரண்டு ஆண்டுகள் மொத்தமாக முடிந்த நிலையில் இப்போது நிலைமையே தலைகீழாக மாறியிருக்கிறது. உக்ரைன் - ரஷ்யா போரில் உக்ரைன் முன்னேற, ரஷ்யா பின்வாங்கிக்கொண்டிருக்கிறது.
ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியைக் கிட்டத்தட்ட கைப்பற்றிவிட்டது உக்ரைன். 117 ஆளில்லா விமானங்கள் மூலம் உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ‘’NATO நாடுகள் ரஷ்யாவை அழிக்கத்துடிக்கின்றன, ரஷ்யா திரும்பி அடிக்கும்’’ என ரஷ்யாவின் தலைவர்கள் எதிர்க் குரல் எழுப்பிவருகின்றனர்.
உக்ரைனின் இந்த வெற்றி ரஷ்ய அதிபர் புதினுக்கு மிகப்பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. உக்ரைனின் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, நான்கு ரஷ்ய விமானத் தளங்கள் மீது பெரிய டிரோன் தாக்குதலை நடத்தியதாகவும், ரஷ்ய எல்லைக்குள் உக்ரைன்ரேனின் போர் வீரர்கள் தொடர்ந்து முன்னேறி வருவதாகவும் பேசியிருக்கிறார். ‘’குர்ஸ்க் பகுதியில் இரண்டு கிலோமீட்டர் வரை முன்னேறி இருக்கிறோம். நூற்றுக்கும் மேற்பட்ட ரஷ்யப் படைவீரர்களை பிடித்திருக்கிறோம்’’ என்று அவர் சொல்லியிருக்கிறார்.
ரஷ்யாவின் பெல்கோரோட் பகுதியின் ஆளுநர் வியாசஸ்லாவ் கிளாட்கோவ் போர்ச்சூழல் காரணமாக அவசர நிலையை அறிவித்திருக்கிறார்.
உக்ரைனின் முன்னேற்றம், ரஷ்யாவின் பின்னடைவு இந்த போரின் திசையையே முற்றிலும் மாற்றி அமைத்துள்ளது. உலக அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் இந்த மோதலில் அடுத்து என்ன நடக்கும் என்பதே மிகப்பெரிய திகில் அத்தியாயமாக இருக்கிறது. உக்ரைன் வெற்றி கண்டால், ரஷ்யாவுக்கு இது மிகப்பெரிய பின்னடைவாக மாறும். அதோடு உலக அரசியல் களத்தில் ரஷ்யா வீழ்த்தப்படும்.
என்ன வியூகம் அமைக்கிறது ரஷ்யா?!