ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் புதிய திருப்பம்… தொடர்ந்து வழக்கறிஞர்கள் கைது செய்யப்படுவதன் பின்னணி என்ன?
கடந்த ஜூலை 5-ம் தேதி மாலை சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் 8 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார். கொலை நிகழ்ந்த அடுத்த நான்கு மணி நேரத்துக்குள் கொலையாளிகள் சரண் அடைந்ததால் இது பழிக்குப்பழியாக நடந்த கொலை எனச்சொல்லப்பட்டது. ஆனால், தொடர்ச்சியாக வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டுவரும் நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணை தற்போது வேறுபக்கம் திரும்பியிருக்கிறது.
வழக்கறிஞர் ஹரிஹரன் என்பவர் கைது செய்யப்பட்டபிறகுதான் உண்மைக் குற்றவாளிகள் யார், கொலைக்கான காரணம் என்ன என்பது தெரியவந்திருப்பதாகச் சொல்கிறார்கள் போலீஸுக்கு நெருக்கமானவர்கள். வழக்கறிஞர் ஹரிஹரன் சம்பவம் செந்திலின் டீமில் இருந்த முக்கியமான ஆள். இவருடன்தான் சம்பவ செந்தில் வாட்ஸ்அப், இன்ஸ்டா மூலம் தொடர்புகொண்டு இந்தக்கொலையை எப்படி செய்யவேண்டும் என ஸ்கெட்ச் போட்டுக்கொடுத்திருக்கிறார் என்கிறார்கள்.
வழக்கறிஞர் ஹரிஹரன் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டபிறகு உடலைப் பார்வையிட வந்ததோடு, பகுஜன் சமாஜ் கூட்டங்களிலும் கலந்துகொண்டிருக்கிறார். ஆம்ஸ்ட்ராங் கொலையில் வழக்கறிஞர்களாக ஒருங்கிணைந்ததன் பின்னணியில் வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தலில் ஏற்பட்ட பிரச்சனை முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது.
ஹரிஹரனை போலீஸ் பிடித்ததுமே சம்பவ செந்திலின் டீமில் இருந்த முக்கிய நபரான கிருஷ்ணன் என்பவர் வெளிநாட்டுக்கு தப்பியோடிவிட்டார். இந்நிலையில் தற்போது இன்னொரு வழக்கறிஞரை போலீஸார் இன்னும் கைது செய்யாமல் விசாரித்துவருகின்றனர். அவர் கைது செய்யப்படும்போது கொலைக்குப் பின்னாலான முழுமையான விவரங்கள் வெளிவரும் என்கிறார்கள்.
ஆம்ஸ்ட்ராங் 2008-ம் ஆண்டு சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் இருதரப்பு மாணவர்களுக்கு இடையே நிகழ்ந்த மோதலில் தலித் மாணவர்களுக்கு ஆதரவாக இருந்தார். அதேப்போல் தொடர்ந்து வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தல் உள்ளிட்ட பல நிகழ்வுகளில் ஆம்ஸ்ட்ராங்கின் கையே ஓங்கியிருந்திருக்கிறது. இது இன்னொரு தரப்புக்கு பிடிக்காத நிலையில் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்யும் அசைன்மென்ட் சம்பவ செந்திலுக்குத் தரப்பட்டிருக்கிறது.
சம்பவ செந்தில் ஆம்ஸ்ட்ராங்குக்கு எதிரிகளாக இருந்த பல்வேறு ஆட்களையும் ஒன்றுதிரட்டி ஹரிஹரணின் துணையோடு இந்தக் கொலையை நிகழ்த்தியிருக்கிறார் என்கிறார்கள். சம்பவ செந்தில் வேற்று சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் கொலைக்கு தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களையே பயன்படுத்தியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
சம்பவ செந்திலை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீஸார் தேடிவருகின்றனர்.