‘’நானே வருவேன்'’ போயஸ் கார்டனில் சசிகலா பேட்டியும், பரபரப்பும்!
போயஸ் கார்டனில் புது வீடு வாங்கி குடியேறியிருக்கும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா இன்று பத்திரிகையாளர்களைச் சந்திருக்கிறார். அதிமுகவில் நிலவும் சாதி அரசியல், விக்ரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு, தன்னுடைய அரசியல் என்ட்ரி எனப் பரபரப்பாக சசிகலா பேச மீண்டும் இப்போது அவர் மீது கவனம் திரும்பியிருக்கிறது.
2015-ம் ஆண்டு ஜெயலலிதா மரணம் அடைந்ததும் அதிமுக-வின் பொதுச்செயலாளர் ஆன சசிகலா அடுத்த சில நாட்களில் முதலைமைச்சராகப் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் 4 ஆண்டு சிறைதண்டனைப் பெற்று பெங்களூரு சிறைக்குச் சென்றார். சிறை செல்லும்முன் ஜெயலலிதா சமாதியில் சபதம் எடுத்துவிட்டுப்போனவரால் வெளியே வந்து நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் பெரிதாக எதுவும் செய்யமுடியவில்லை. இதற்கிடையே இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த சசிகலா ஆவேசமாகப் பேசியிருக்கிறார்.
பத்திரிகையாளர்களிடம் பேசும் முன்பாக பூட்டிய அறைக்குள் நிர்வாகிகள் சிலரோடு பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். அதன்பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசியவர் ‘’அதிமுக முடிந்துவிட்டது என சிலர் நினைக்கிறார்கள். ஆனால், இனிதான் அதிமுக-வுக்கு நல்ல நேரம் வந்திருக்கிறது. ஏனென்றால் என்னுடைய அரசியல் என்ட்ரி ஆரம்பித்துவிட்டது. ஜெயலலிதா சாதி பார்த்ததில்லை. சாதி பார்த்திருந்தால் அவர் என்னுடன் பழகியிருக்கமாட்டார். அதேப்போல் நானும் சாதி பார்த்திருந்தால் பெங்களூரு செல்லும்முன் பழனிசாமியை முதலமைச்சர் ஆக்கியிருக்கமாட்டேன். ஆனால், இப்போது அதிமுக-வுக்குள் இருந்துகொண்டு சாதி அரசியல் செய்கிறார்கள். அப்படி செய்பவர்கள் வேறு எங்காவது போகலாம். விக்ரவாண்டியில் அதிமுக தேர்தலைப் புறக்கணித்தது தவறு. 2026 தேர்தலுக்காக தமிழகம் முழுக்க நானே சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்ய இருக்கிறேன்'’ எனப் பேட்டியளித்திருக்கிறார் சசிகலா