எங்கும் ஒலிக்கிறது "தாய்மண்ணே வணக்கம்''... ஆனால்?!
சுதந்திரம் என்பதன் உண்மையான அர்த்தத்தை கேள்வி கேட்கும் வகையில், டாக்டர் சசித்ரா தாமோதரன், தனது கவிதை மூலம் கொல்கத்தாவில் நடைபெற்ற கொடூர சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். கோவை காரமடையில் ‘சவிதா’ எனும்பெயரில் முன்னணி மகளிர் மருத்துவமனையை நடத்திவரும் டாக்டர் சசித்ரா இந்திய நாட்டில் எல்லா பக்கமும் சுதந்திர கீதம் முழங்கும் அதேநேரம், பெண்களின் சுதந்திரம் மண்ணில் புதைந்துகொண்டிருக்கும் வேதனையை தன் கவிதையால் பதிவு செய்திருக்கிறார்.
டாக்டர் சசித்ரா தனது மருத்துவமனையில் இந்தியாவின் 78-வது சுதந்திர தினமான நேற்று மெழுகுவர்த்தி ஏந்தி அமைதிப் போராட்டத்தையும் தலைமையேற்று நடத்தியிருக்கிறார். சசித்ரா எழுதியிருக்கும் கவிதை இங்கே!
சுதந்திரம்-78
புர்காவுக்குள் வெந்து தணிகிறாள் சுபெய்தா...
அலுவலகம் புறப்படும் முன் அடுப்படியில் வியர்த்து ஒழுகுகிறாள் சுந்தரி...
ரேஷன் வரிசையில் கால்கடுக்க குழந்தையுடன் நிற்கிறாள் செண்பகம்...
விளைவித்த கத்திரியை கூறுபோட்டு கூவி விற்கிறாள் செங்கமலம்...
கத்திரி வெயிலிலும் வெள்ளரி விற்கிறார் வயதான செல்லம்மா...
மதுவருந்தி மண்ணில் கிடக்கும் கணவனைக் கைத்தாங்கலாக அழைத்துச் செல்கிறாள் செவ்வந்தி...
அநீதிக்குக் குரல்கொடுத்து அரசாங்கப் பணியை இழக்கிறாள் சுடர்க்கொடி...
கயவர்களால் சின்னாபின்னமாக்கப்பட்டு உயிரிழக்கிறார் கொல்கத்தா பெண் மருத்துவர்...
ஆயினும் உரக்க எங்கும் ஒலிக்கிறது "தாய்மண்ணே வணக்கமும் தேசிய கீதமும்..!''
ஆம் நாம் சுதந்திரம் பெற்று 78-வது ஆண்டுகள் ஆகிறது!
என்று தனது கவிதையின் மூலம் கொல்கத்தா சம்பவத்தைக் குறித்து தனது வேதனையைப் பதிவு செய்திருக்கிறார் டாக்டர் சசித்ரா தாமோதரன். இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து 78 ஆண்டுகள் ஆன பிறகும், பெண்களின் சுதந்திர வாழ்வுக்கான கனவு இன்னும் நிறைவேறவில்லை என்பதன் அடையாளமே இந்தக் கவிதை!