600 கிலோவில் இருந்து 60 கிலோ... சவுதி இளைஞரின் நம்பவே முடியாத எடைகுறைப்பு சாதனை!
இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது உடல் எடை அதிகரிப்பு தான். உடல் உழைப்பு இல்லாத/ மிகக் குறைந்த ``sedentary” வாழ்க்கை முறையில் இருப்பதால் உடல் எடை அதிகரிப்பது பொதுவான பிரச்சனை ஆகிவிட்டது. உடல் பருமனை குறைக்க யோகா, உடற்பயிற்சி, உணவு முறை மாற்றம் போன்ற விஷயங்களில் பலர் கவனம் செலுத்தி வருகின்றனர். மற்றொருபுறம் பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை போன்ற எடை இழப்பு சிகிச்சை முறைகளும் பிரபலமாகி வருகிறது.
இந்நிலையில் சவூதி அரேபியாவை சேர்ந்த 33 வயதான காலித் பின் மொஹ்சென் ஷாரி என்ற இளைஞர் என்பவர் 610 கிலோ எடையுடன், உலகின் அதிக எடையுள்ள டாப் 5 நபர்களில் ஒருவராக இருந்தார். தற்போது கடந்த 10 ஆண்டுகளில் வாழ்க்கையை மாற்றி அமைத்து 90 % வரை உடல் எடையை குறைத்து சாதனை மனிதர் ஆகிவிட்டார்.
காலித் பின் மொஹ்சென் ஷாரி கடந்த 2013-ம் ஆண்டு அதீத உடல் எடையால் உடல்நிலை பாதிக்கப்பட்டு நகர முடியாமல் அவதிப்பட்டார். 610 கிலோ எடையுடன் 3 ஆண்டுகளுக்கும் மேல் படுக்கையிலேயே இருந்தார். அதிகப்படியான உடல் எடை காரணமாக உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார்.
2013-ல் இதுகுறித்து கேள்விப்பட்ட சவுதி அரேபியாவின் முன்னாள் மன்னர் அப்துல்லா, பதின் வயதில் இருந்த மொஹ்சென் ஷாரிக்கு உதவ முன் வந்தார். உயர்மட்ட சிகிச்சைக்கு உதவி செய்தார்.
அதீத எடையுடன் வீட்டை விட்டு நகராமல் இருந்த அப்துல்லா, ஒரு ஃபோர்க்லிஃப்ட் மற்றும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட படுக்கை வசதியை பயன்படுத்தி ஷாரியை அவரது வீட்டிலிருந்து வெளியே கொண்டு வந்து ரியாத் வரை அழைத்து சென்றனர்.
ரியாத்தில் இருந்து கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டிக்கு மாற்றப்பட்டார். இந்த சிறப்பு நடவடிக்கைக்கு பின் ரியாத்தில் அவருக்கு உயர் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரின் சிகிச்சையை மேற்பார்வையிட 30 மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழு உருவாக்கப்பட்டது. அங்கு அவருக்கு இரைப்பை பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அறுவை சிகிச்சைக்கு பின்னர் பிரத்யேகமாக வாழ்க்கை முறை திட்டம் அவருக்காக வடிவமைக்கப்பட்டது. உணவு முறை மற்றும் உடற்பயிற்சிகள் பின்பற்றப்பட்டது. ஆறு மாதங்களுக்குள் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. மருத்துவக் குழுவின் தீவிர சிகிச்சை மற்றும் பிசியோதெரபியும் அவரது முன்னேற்றத்திற்கு உதவியது.
பத்து வருடங்களாக உணவுமுறை, உடற்பயிற்சிகள் மூலம் 90 %வரை உடல் எடை குறைந்து காலித், 2023-ம் ஆண்டு தனது உடல் எடையில் 542 கிலோ வரை குறைத்து, 63.5 கிலோ எடையுடன் ஆரோக்கியமான மனிதர் ஆகிவிட்டார்.