SEBI தலைவர் மாதபி புச்சுக்கு 35 கோடி சம்பளம் வழங்கியதா ஐசிஐசிஐ வங்கி?! காங்கிரஸ் குற்றச்சாட்டு
சமீபத்தில்தான் ஹிண்டன்பர்க் அறிக்கை செபி தலைவர் மாதபி புச் மற்றும் அவரது கணவர் இருவருக்கும் அதானி பங்குகளில் தொடர்பு இருப்பதாகவும், செபி தலைவராக இருந்துகொண்டே தனியார் நிறுவனத்தில் பொறுப்பில் இருப்பதாகவும் குற்றம்சாட்டியது. இவை அனைத்துக்கும் ‘’சட்டப்படி நாங்கள் எந்தக் குற்றமும் செய்யவில்லை’’ என மாதபி புச்சும், அவரது கணவரும் விளக்கம் அளித்தனர்.
இந்நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சி மாதபி புச் மீது புதிய குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பவன் கேரா ‘’2017 முதல் 2024 வரை மாதபி புச் ஐசிஐசிஐ வங்கியில் இருந்து 12 கோடி ரூபாய்க்கும் மேல் சம்பளமாகப் பெற்றதோடு, ஐசிஐசிஐ ப்ருடென்ஷியல் நிறுவனத்திலிருந்து 22.41 கோடி ரூபாய் சம்பளமாகவும், மேலும் ஐசிஐசிஐ வங்கியிலிருந்து 2 கோடி ரூபாய்க்கும் மேல் ESOP-களை பெற்றார்’’ என்றும் குற்றம்சாட்டியிருக்கிறார்.
ESOP என்பது Employee Stock Ownership Plan (பணியாளர்கள் பங்கு உரிமை திட்டம்) என்பதின் சுருக்கமாகும். இது ஒரு நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு அந்த நிறுவனத்தின் பங்குகளில் உரிமையைக் கொடுக்கும் திட்டமாகும். இதன்படிதான் 2 கோடி ரூபாயும் மாதபி புச் பெற்றிருக்கிறார் என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
"SEBI இந்தியாவின் பங்குச் சந்தையை கட்டுப்படுத்தும் முக்கியப் பொறுப்பை வகிக்கிறது. அதில்தான் நாம் எல்லோரும் நம்முடைய பணத்தை முதலீடு செய்கிறோம். அதனால் செபியின் தலைவர் பொறுப்பு என்பது மிக மிக முக்கியமானது. SEBI தலைவரை அமைச்சரவை நியமனக் குழு, பிரதமர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் இணைந்துதான் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இவர்கள் தேர்ந்தெடுத்த செபியின் தலைவர் எப்படி 2017 முதல் 2024 வரை ஐசிஐசிஐ வங்கியில் இருந்து 16 கோடியே 80 லட்சம் ரூபாய் வரை தொடர்ந்து வருமானமாகப் பெற்றார்? முழு நேர SEBI உறுப்பினராக இருக்கும்போது மாதபி புச் ஏன் ஐசிஐசிஐ வங்கியிலிருந்து சம்பளம் பெற்றார்" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ஹிண்டன்பர்க் அறிக்கையை புறம்தள்ளியதுபோல் இந்தக் குற்றச்சாட்டை மாதபி புச் தட்டிவிடமுடியாது என்கிறார்கள் அரசியல் மற்றும் பொருளாதார விமர்சகர்கள். விரைவில் மாதபி புச் செபி தலைவர் பதவியில் இருந்து விலகுவார் என சொல்லப்படுகிறது.