வங்கதேச கலவரம்
வங்கதேச கலவரம்

வங்கதேசம் : நாட்டைவிட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா… மக்கள் போராட்டத்தால் முடிவுக்கு வந்த 15 வருட ஆட்சி!

வங்கதேச அரசுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் வன்முறையாக வெடித்து, கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பலியாகியிருக்கும் நிலையில் பிரதமர் பதவியில் இருந்து விலகி, நாட்டைவிட்டே வெளியேறியிருக்கிறார் ஷேக் ஹசீனா.
Published on

ஷேக் ஹசீனாவுக்கு பதவியில் இருந்து விலக 45 நிமிட அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில், பிரதமர் அரண்மனையில் இருந்து வெளியேறி இந்தியாவின் திரிபுரா மாநிலத்தில் உள்ள அகர்தலாவுக்கு ஷேக் ஹசீனா வந்திருக்கிறார். பிரதமர் விலகியதால் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படும் என வங்கதேசத்தின் ராணுவத்தளபதி வாக்கர்-உஸ்-ஜமான் அறிவித்துள்ளார்.

கடந்த மாதம் போர் வீரர்களின் குழந்தைகளுக்கு ஆதரவான சர்ச்சைக்குரிய அரசு வேலை ஒதுக்கீட்டு முறை மீண்டும் பின்பற்றப்படும் என அந்நாட்டு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக மாணவர்கள் மிகப்பெரிய போராட்டத்தை தொடங்கினர். இதனால் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு மாணவர் போரட்டத்தை முடக்க, பல்கலைக்கழகங்களை மூடியதோடு, ஆர்ப்பாட்டக்காரர்களை அடக்க காவல்துறை மற்றும் இராணுவத்தைப் பயன்படுத்தியது.

ஷேக் ஹசீனா
ஷேக் ஹசீனா

இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதோடு, தலைநகர் டாக்காவில் இணைய சேவை துண்டிக்கப்பட்டது.

மாணவர் போராட்டம் மிகப்பெரிய வன்முறைப்போராட்டமாக மாறியதால் வங்கதேச உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக அளித்த தீர்ப்பை ரத்து செய்தது. தகுதிகளின் அடிப்படையில்தான் அரசு வேலை வழங்கப்படும் என அறிவித்தது.

ஆனால், கொல்லப்பட்டவர்களுக்கு நீதிவேண்டி மாணவர்களின் போராட்டம் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்யவேண்டும் என மாற்றம் அடைந்தது. இந்தப்போராட்டம் வன்முறையாக வெடிக்க மீண்டும் பலரும் கொல்லப்பட்டனர்.

வங்கதேச கலவரம்
வங்கதேச கலவரம்

நேற்று பிரதமர் அலுவலகத்துக்கு எதிரே நடந்தப் போராட்டத்தில் 10க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு தலைநகரமே ரத்தக்களறியானது. இந்நிலையில் வலுக்கும் எதிர்ப்பைக் கட்டுப்படுத்த ஷேக் ஷசீனாவை ராணுவம் பதவி விலகச்சொல்ல, இன்று மதியம் பதவி விலகி நாட்டைவிட்டே வெளியேறி ஹெலிகாப்டர் மூலம் இந்தியாவின் திரிபுரா மாநிலத்தில் உள்ள அகர்தலாவுக்கு வந்திருக்கிறார் ஷேக் ஹசீனா.

இவர் வெளியேறிய கொஞ்ச நேரத்துக்குள் அதிபர் அரண்மனைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்தனர். இந்தியாவில் இருந்து ஷேக் ஹசீனா மேற்கத்திய நாட்டுக்குச் செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ப்பும், வங்கதேசத்தின் அடுத்த கட்ட அரசியல் மாற்றமும் உலகம் முழுவதும் உற்று கவனிக்கப்படுகிறது!

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com