இலங்கை தேர்தலில் மாபெரும் திருப்பம்... அதிபர் ஆகிறார் கம்யூனிஸ்ட் தலைவர் அநுர குமார திசாநாயக்க!
இலங்கையை சூழ்ந்திருக்கும் கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கிடையே இலங்கை அதிபருக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் இடைக்கால அதிபராக பதவியில் இருக்கும் ரணில் விக்கிரமசிங்கே, எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரமேதாசா, அநுர குமார திசாநாயக்க, நமல் ராஜபக்சே, முன்னாள் ராணுவதலைவர் சரத் ஃபொன்சேகா உள்ளிட்ட 38 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இலங்கை வரலாற்றில் அதிகபட்சமாக 38 போட்டியாளர்கள் போட்டியிட்டது இதுவே முதல்முறை. ஆனால், இதில் ஒரு பெண் வேட்பாளர்கூட இல்லை.
நேற்று காலை தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணிக்கு நிறைவடைந்தவுடன் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் வரலாறு காணாத வகையில் ஜனதா விமுக்தி பெரமுனா கட்சியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க வெற்றிவாகை சூடும் வகையில் முன்னிலையில் உள்ளார்.
தேசிய மக்கள் சக்தி எனும் பெயரில் 28 கட்சிகள் கூட்டணியுடன் போட்டியிட்ட அநுர குமார திசாநாயக்க இன்று காலை 7 மணி நிலவரப்படி 6 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று வரலாறு காணாத வெற்றியை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறார்.
கடந்த 2019 அதிபர் தேர்தலில் போட்டியிட்ட அநுர குமார வெறும் 3 சதவிகித வாக்குகளே பெற்றிருந்த நிலையில், 2024 தேர்தலில் தற்போதைய நிலவரப்படி 50 சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார்.
இலங்கை அதிபர் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பின்னணி கொண்ட வேட்பாளர் அதிபராகப் பொறுப்பேற்கப்போவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. 55 வயதான அநுர குமார திசாநாயக்க ஆட்சிக்கு வந்தால் வரிகள் குறைக்கப்படும் என வாக்குறுதி அளித்திருப்பதோடு, இந்தியா, சீனா என இரண்டு வல்லரசுகளுடனுமே இணைந்து பணியாற்றுவேன் என்றும் அறிவித்திருந்தார்.