மு.க.ஸ்டாலின் - திருமாவளவன் முக்கிய சந்திப்பு: பதட்டமான சூழலில் திருமாவளவனின் நிலைப்பாடு என்ன?
திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்திருக்கும் மது ஒழிப்பு மாநாடு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த மாநாடு குறித்த செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் இதில் அதிமுக-வும் கலந்துகொள்ளலாம் என திருமாவளவன் சொல்ல, அது அரசியல் சர்ச்சையாக மாறியது.
கூட்டணி மாறுகிறார் திருமாவளவன், திமுக தலைமைக்கு அழுத்தம் கொடுக்கிறார் என விவாதங்கள் பரவிய நிலையில் இரு தினங்களுக்கு முன்பு ‘’ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு'’ என திருமாவளவன் பேசிய பேச்சும் வைரல் ஆனது. இந்த வீடியோவை எக்ஸ் தளத்தில் பதிவிட்டு பின்னர் அதை நீக்கியதும் சர்ச்சையானது. இதற்கிடையே நேற்று முன்தினம் (சனிக்கிழமை)தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார். இந்த சூழலில் இன்று காலை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவனை சந்திக்க நேரம் கொடுத்திருக்கிறார்.
இரு கட்சித் தலைவர்களும் இன்று காலை 11 மணியளவில் சந்திக்க இருக்கும் நிலையில் திருமாவளவன் நேற்றிரவு திருவாரூரில் பேசினார். “டாஸ்மாக்கை மூடுவது என்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. அதில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருவதால் படிப்படியாகக் குறைத்திட வேண்டும். மது ஒழிப்புக்காக விசிகவுக்கு எந்த பாதிப்பு வந்தாலும் அதனை எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம். எப்படியாவது கூட்டணியில் பிளவு ஏற்பட்டுவிடாதா? என சிலர் நினைக்கிறார்கள். தற்போது வரையில் திமுக கூட்டணியில்தான் விசிக உள்ளது” எனத் தெளிவுபடுத்தியிருக்கிறார்.