அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின்… விடுதலை ஆகிறார் டெல்லி முதல்வர்!
மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது. இந்த வழக்கில், மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ 2021-22 ஆண்டுக்கான கலால் கொள்கையில் முறைகேடுகள் ஏற்பட்டதாக வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு மற்றும் அமலாக்கத்துறை வழக்கு காரணமாக 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் டெல்லி முதலமைச்சரான அரவிந்த் கெஜ்ரிவல். சிறையில் இருந்தபடியே முதலமைச்சர் பணிகளை கவனித்துவந்த கெஜ்ரிவாலின் ஜாமின் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்துவந்தது.
நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் உஜ்ஜல் புயான் அடங்கிய பென்ச், இந்த வழக்கின் விசாரணை விரைவில் முடிவடைய வாய்ப்பில்லை. எனவே, கெஜ்ரிவாலுக்கு ஜானின் வழங்கலாம் என்று உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றம், இந்த வழக்கு தொடர்பாக கெஜ்ரிவால் வெளியே எதுவும் பேசக்கூடாது எனக் குறிப்பிட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு விசாரணைக்கும் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
சிபிஐ சட்ட விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும், விசாரணையை சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நடத்த வேண்டும் என்றும் நீதிபதி உஜ்ஜல் புயான் தனது தனி கருத்தாக குறிப்பிட்டுள்ளார்.