"முகத்தை மூடு... பாடல் பாடாதே... ஆண்களைப் பார்க்காதே" - பெண்களுக்கு எதிரான ஆப்கானிஸ்தான் சட்டங்கள்
ஆஃப்கானிஸ்தானில் ஏற்கெனவே பெண்களின் சுதந்திரத்துக்கு எதிராக பல்வேறு தடைகள் அமலில் உள்ள நிலையில், தற்போது தலிபான் ஆட்சியாளர்கள் மேலும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது உலகம் முழுவதும் உள்ள பெண் செயற்பாட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சமீபத்தில் தலிபான் அரசாங்கம், நல்லொழுக்கத்தை மேம்படுத்துதல் மற்றும் தீமைகளை எதிர்த்துப் போராடுவதை நோக்கமாகக் கொண்ட புதிய விதிமுறைகள் என்று சொல்லி சில கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியது. இந்த உத்தரவுகள் தலிபான் உச்ச தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்சாதாவால் ( Hibatullah Akhundzada) அங்கீகரிக்கப்பட்டு, கடந்த புதன்கிழமை அரசாங்க செய்தித் தொடர்பாளரால் அறிவிக்கப்பட்டது என்று நியூஸ்வைர் அசோசியேட்டட் பிரஸ் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் 2021-ல் முழுக் கட்டுப்பாட்டை தலிபான்கள் மீண்டும் கைப்பற்றினர். அதன் பின்னர், "நல்லொழுக்கத்தைப் பரப்புதல் மற்றும் தீமைகளைத் தடுக்கும் விதிமுறைகள்" என்ற பெயரில் ஒரு அமைச்சகம் அமைக்கப்பட்டது. அதன் கீழ் பெண்களின் சுதந்திரத்துக்கு எதிரான பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
புதன்கிழமை புதிதாக வெளியிடப்பட்ட 114-பக்க ஆவணத்தில், பொது போக்குவரத்து, இசை, தனிப்பட்ட ஒழுக்கம் மற்றும் கொண்டாட்டங்கள் உட்பட அன்றாட வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களைக் குறித்து விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தலிபான் ஆட்சியில் இதுபோன்ற விதிமுறைகளை முறைப்படி வெளியிடுவது இதுவே முதல் முறையாகும்.
"இந்த இஸ்லாமிய சட்டம் நல்லொழுக்கத்தை மேம்படுத்துவதற்கும் தீமைகளை ஒழிப்பதற்கும் பெரிதும் உதவும் என்று நாங்கள் உங்களுக்கு உறுதியளிக்கிறோம்" என்று அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.
பிரிவு 13-ன் முக்கிய விதிகளின்படி பெண்கள்,
பொது இடங்களுக்கு செல்லும் போது முழு உடலையும் மறைத்திருக்க வேண்டும்.
பிறர் சலனமடைவதை தவிர்க்க முகங்களை கூட முழுமையாக மறைக்க வேண்டும்.
பெண்கள் பொது இடங்களில் பாடுவது, அல்லது சத்தமாக வாசிப்பது கூடாது. (அவர்களின் குரல் சலனத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுவதால்)
பெண்கள் தங்களுக்கு தொடர்பில்லாத ஆண்களைப் பார்க்க கூடாது.
பிரிவு 19-ன் படி,
-பெண்கள் இசை வாசிக்க கூடாது
- பெண் பயணிகளுக்கான தனிப் போக்குவரத்து
- தொடர்பில்லாத ஆண்களும் பெண்களும் உறவில் ஒன்றிணையக் கூடாது.
இந்த கட்டுப்பாடுகள் உலகம் முழுவதும் உள்ள செயற்பாட்டாளர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் எதிர்பையும் ஏற்படுத்தியுள்ளது.