நாட்டின் பிரதமரையே பதவி நீக்கம் செய்த நீதிமன்றம்… அரசியல் குழப்பத்தில் தாய்லாந்து!
சுற்றுலா பயணிகளின் சொர்க்கம் என கொண்டாடப்படும் தாய்லாந்தில் அரசியல் குழப்பம் நிகழ்ந்துவருகிறது. அரசியலமைப்பு சட்டத்தை மீறியதாக அந்நாட்டு பிரதமரையே பதவி நீக்கம் செய்திருக்கிறது தாய்லாந்தின் அரசியலமைப்பு நீதிமன்றம்.
பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் (Srettha Thavisin) அரசியலமைப்பை மீறியதாக தாய்லாந்தின் அரசியலமைப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இது சுற்றுலாவுக்குப் புகழ்பெற்ற நாட்டில் அரசியல் குழப்பத்தை அதிகப்படுத்தியுள்ளது.
62 வயதான ஸ்ரேத்தா தவிசின் தாய்லாந்தின் 30-வது பிரதமராக கிட்டத்தட்ட ஓராண்டாகப் பதவி வகித்து வந்தார். முன்னாள் அமைச்சரும், ரியல் எஸ்டேட் அதிபருமான ஸ்ரேத்தா தவிசின் சிறை தண்டனைப்பெற்றா ஒரு வழக்கறிஞரை அமைச்சரவையில் நியமித்ததன் மூலம் அரசியலமைப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறியதாக பாங்காக்கில் உள்ள அரசியலமைப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
அரசியலமைப்பு நீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகளில் ஐந்து பேர், ஸ்ரேத்தாவையும் அவரது அமைச்சரவையையும் பதவி நீக்கம் செய்ய வாக்களித்தனர். பிரதம மந்திரி அமைச்சராகக் கூடிய தகுதியில்லை என்று தெரிந்தே அமைச்சராக நியமித்ததால் அவரைப் பதவி நீக்கம் செய்கிறோம் என நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.
இந்த தீர்ப்பு தாய்லாந்தில் அரசியல் சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது. கடந்த 16 ஆண்டுகளில் அரசியலமைப்பு நீதிமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்படும் நான்காவது பிரதமர் ஸ்ரேத்தா என்பது குறிப்பிடத்தக்கது!
பிரதமரையே தூக்கிட்டாங்களே மக்கா?!