சிக்கலில் மோகன்லால்… பாலியல் தொல்லை குறித்து வெளிப்படையாக பேச தொடங்கிய நடிகைகள்!
மலையாள திரைப்படங்கள் சமீப காலமாக இந்திய அளவில் பெரும் கவனம் மற்றும் வரவேற்பை பெற்று வருகிறது. இருந்தும் மலையாள சினிமா துறையில், நடிகைகள் கடும் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுந்தது. இது குறித்து விசாரனை மேற்கொள்ள நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது.
ஹேமா கமிட்டி, நடிகைகள் எதிர்கொள்ளும் பாலியல் தொந்தரவுகள் குறித்து விசாரணை மேற்கொண்டு, அதற்கான அறிக்கையாக கடந்த 2017-ம் ஆண்டு அறிக்கை தயார் செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. ஆனால், இந்த அறிக்கை வெளிவந்தால் எங்கே தங்களுடைய பெயர் வெளி வந்துவிடுமோ என்று அச்சப்பட்டு, திரைத்துறையில் உள்ள பெரும் புள்ளிகள், நீதிமன்றத்தை அணுகி, அறிக்கையை வெளியிடாமல் பார்த்துக்கொண்டனர். ஆனால், நீதிமன்றம் அறிக்கையை கடந்த 19-ம் தேதி வெளியிட்டது.
அதில், நடிகைகள் சினிமாவில் நடிக்க படுக்கைக்கு அழைக்கப்படுகிறார்கள், நிர்வாணமாக நடிக்க கட்டாயப்படுத்தப்படுகிறார்கள், மீறும் பட்சத்தில் அவர்கள் மிரட்டப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக மலையாள சினிமா சில மாஃபியாக்களின் கைகளில் சிக்கியுள்ளது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது கேரள மாநில அரசே இந்த விவகாரத்தை தீவிர விசாரணை நடத்தி, நடவடிக்கை மேற்கொள்ள களத்தில் இறங்கியுள்ளது.
இதைதொடர்ந்து பல நடிகைகள் தாங்கள் எதிர்கொண்ட கசப்பான சம்பவங்கள் குறித்து வெளிப்படையாக பேச தொடங்கியுள்ளனர். குறிப்பாக நடிகை ரேவதி சம்பத், நடிகரும், மலையாள நடிகர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளருமான சித்திக் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்று கூறியிருந்தார். அதேப்போல் நடிகர் ரியாஸ் கானும் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்று கூறியிருந்தார். இந்த குற்றச்சாட்டையடுத்து, பொதுச்செயலாளர் பதவியை சித்திக் ராஜினாமா செய்துள்ளார்.
மேலும், பெங்காலி நடிகையான ஸ்ரீலேகா மித்ரா, பிரபல மலையாள சினிமா இயக்குநருமான ரஞ்சித் மீது பாலியல் புகார் தெரிவித்ததை தொடர்ந்து ரஞ்சித்தும் ராஜினாமா செய்தார். இதுபோல் பல முக்கிய நடிகர்கள், இயக்குநர்கள் மீது, நடிகைகள் பாலியல் புகார்களை தெரிவித்து வருகின்றனர்.
இது நடிகர் மோகன்லாலுக்கு பெரிய நெருக்கடியை மாறியுள்ளது. ஏனெனில் இவர் தற்போது மலையாள நடிகர்கள் சங்கத்தின் தலைவராக இருக்கின்றார். பொதுச் செயலாளர் நடிகைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது மோகன்லாலுக்கு தெரியாதா? என்றவாறு கேள்விகள் எழுந்துள்ளது. மேலும் அவருக்கு தெரிந்தும் நடிகர்களை காப்பாற்றுகிறார் என்ற குற்றச்சாட்டும் இவர் மேல் வைக்கப்படுகிறது. சக நடிகைகள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல்கள் கூட தெரியாமல் எதற்காக நடிகர் சங்கத்தின் தலைவராக இருக்கின்றார்? என்று கொந்தளிப்பு மோகன்லால் மீது எழுந்திருக்கிறது.