வந்தே பாரத் ரயிலை ஆக்கிரமித்த வித்அவுட்கள்... லக்னோவில் சம்பவம்!
வட இந்தியாவில் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் ரிசர்வேஷன் பெட்டிகளில் பயணிப்பவர்கள் எண்ணிக்கை அதிகம். அதே பாணியில் தற்போது தமிழ்நாட்டிலும் பல ரயில்களை வட இந்தியர்கள் ஆக்கிரமித்து வருகின்றனர். டிக்கெட் எடுத்தும் முன்பதிவு பெட்டிகளில் ஏறியவர்களை விரட்டியடிக்கும் நம் ஊர் டிடிஆர்களும் இந்த வட இந்தியர்களை கண்டுகொள்வதில்லை.
எக்ஸ்பிரஸ் ரயில்களை ஆக்கிரமித்து வந்த வட இந்திய வித்தவுட்கள் தற்போது வந்தேபாரத் ப்ரீமியம் ரயிலையும் விட்டு வைக்கவில்லை. லக்னோவில் இருந்து புறப்பட்ட வந்தேபாரத் ரயிலை டிக்கெட் எடுக்காமல் பயணிக்கும் ஆயிரக்கணக்கானோர் ஆக்கிரமித்த சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
வந்தேபாரத் ரயிலில் டிக்கெட் எடுத்து பயணிக்கலாம் என்று வந்த போது, டிக்கெட் எடுக்காதவர்களின் ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட Archit Nagar என்ற நபர் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் நேரடி (Live) வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். லக்னோவிலிருந்து டேராடூன் வரை செல்லும் வந்தே பாரத் ரயிலில் பயணிக்க வந்த அவரது இடத்தை டிக்கெட் எடுக்காதவர்கள் ஆக்கிரமித்துவிட்டதாக வீடியோவுடன் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை ரயில்வே அமைச்சரின் எக்ஸ் தள முகவரியுடன் டேக் செய்திருந்தார். ஆனால், நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்ற தகவல் இல்லை.
ரயில்களில் டிக்கெட் எடுக்காமல் அல்லது உடனடி டிக்கெட் எடுத்து முன்பதிவு பெட்டிகளில் பயணிப்பது வட இந்தியாவில் மிகவும் சகஜம். முன்பதிவு செய்த பயணிகள் உஷாராக இல்லாவிட்டால் அவர்களுக்கு உட்கார கூட இடம் கிடைக்காத அளவுக்கு வித்தவுட்கள் அட்டகாசம் இருக்கும். நம் ஊரில் டிடிஆர் மிகவும் மரியாதையாக நடத்தப்படுவார். வட இந்தியாவில் எல்லாம் இப்படி எதிர்பார்க்க முடியாது.
சில மாதங்களுக்கு காசி எக்ஸ்பிரஸில் இப்படி வித்அவுட்கள் ஆக்கிரமிப்பு நடந்தது. முன்பதிவு செய்த பயணிகள் கொந்தளித்து ஆன்லைனில் புகார்களை பதிவு செய்தனர். இதனால் வேறு வழியின்றி நடவடிக்கை எடுக்க டிடிஆர் வந்தார். அவருக்கு எதிராக வித்அவுட்கள் ஒன்று சேர்ந்ததால் அவரால் ஒன்றும் செய்ய முடியாமல் போனது. இரண்டாம் வகுப்பு படுக்கை பெட்டி மட்டுமின்றி ஏசி பெட்டிகள், முதல் வகுப்பு பெட்டிகள் வரையிலும் இந்த டிக்கெட் எடுக்காத அல்லது முன்பதிவு அல்லாத டிக்கெட் எடுத்தவர்களின் அட்டகாசம் நீண்டுவிட்டது.
நம் ஊர் போல வட இந்தியாவில் அவ்வளவாகப் போக்குவரத்து வசதி இல்லை. மக்கள் ரயில்களையே பெரிதும் நம்பியுள்ளனர். அவர்களுக்கு முன்பதிவு செய்யப்படாத ரயில்கள் சேவையை அளிப்பதற்கு பதில், வந்தேபாரத் போன்ற அதிக கட்டணம் கொண்ட ரயில்களையே அதிக அளவில் ரயில்வேத் துறை இயக்குகிறது. இதனால், கிடைத்த வண்டியில், கிடைத்த பெட்டியில் ஏறி பயணிப்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. இப்படி டிக்கெட் இன்றி பயணிப்பவர்களிடம் இருந்து அபராதம் வசூலிப்பது அதிகரித்துள்ளது என்று ரயில்வே தரப்பில் விளக்கம் அளிக்கப்படுகிறது. ஆனால், இப்படி டிக்கெட் எடுக்காமல் பயணிப்பதைத் தடுக்க, உடனடி டிக்கெட் பயன்படுத்த வசதியாக ஏழை, அடித்தட்டு, நடுத்தர மக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் ரயில்களை இயக்க எந்த ஒரு பெரிய நடவடிக்கையையும் ரயில்வே தொடங்கியதாக தெரியவில்லை. சாதாரண ரயில்களை இயக்காமல் எத்தனை வந்தே பாரத் ரயில்களை விட்டாலும் இதுபோன்ற பிரச்னைகளைத் தவிர்க்கவே முடியாது!