78 - வது சுதந்திர தினம்: டெல்லியில் பலத்த பாதுகாப்பு
இந்தியாவின் 78- வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி நாளை காலை 7.30 மணிக்கு தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தின உரையை நிகழ்த்த உள்ளார். இது பிரதமர் மோடியின் 11-வது சுதந்திர தின உரை ஆகும். காலனித்துவ ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்று 100வது ஆண்டாகிய 2047க்குள் நாட்டை ஒரு வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வையை பிரதிபலிக்கும் விதமாக, இந்த ஆண்டு சுதந்திர தின விழா “வளர்ந்த இந்தியா” என்ற கருப்பொருளில் கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது.
சுதந்திர தின விழாவை முன்னிட்டு டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பாதுகாப்பு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு இருப்பதால் பாதுகாப்பு படையினர் மிகுந்த அக்கறை செலுத்தியுள்ளனர். உளவுப்பிரிவு போலீசாரும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். பாதுகாப்பு பணிக்காக 3,500 போக்குவரத்து போலீசார் மற்றும் 10 ஆயிரம் டெல்லி போலீசார் செங்கோட்டையை சுற்றிய பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளனர். செங்கோட்டையின் உட்புற பகுதியில் துணை ராணுவப்படையினர் அடுக்கடுக்காக நிறுத்தப்பட உள்ளனர். செங்கோட்டையைச் சுற்றியுள்ள சாலைகள் பாதுகாப்பு படையினரின் வசம் கொண்டு வரப்பட்டு உள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் அதிகளவில் நிறுவப்பட்டு உள்ளன. செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் 700 இடங்களில் பொருத்தப்பட்ட உள்ளது.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில். நேற்று சுதந்திர தின விழா முழு ஒத்திகை நிகழ்ச்சி செங்கோட்டையில் நடைபெற்றது. இதில் பாதுகாப்புத்துறையைச் சேர்ந்த முப்படை வீரர்களும் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியிள் பாதுகாப்பு மற்றும் மீட்பு பணிகள் தொடர்பான ஒத்திகையும் நடத்தப்பட்டது. டெல்லி செங்கோட்டை பகுதி மட்டுமின்றி விமான நிலையம், ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், வணிக வளாகங்கள், சந்தைகள் போன்ற மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.