Tim Walz : கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுத்த துணை அதிபர் வேட்பாளர்… யார் இவர், பின்னணி என்ன?!
ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளரான கமலா ஹாரிஸுக்கு ஆகஸ்ட் 7-ம் தேதி வரை துணை அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான நாள் குறிக்கப்பட்டிருந்த நிலையில் மினசோட்டா மாகாண கவர்னர் டிம் வால்ஸை VP என சொல்லப்படும் துணை அதிபர் வேட்பாளராகத் தேர்வு செய்துள்ளார் கமலா.
தீவிர இடதுசாரி என டிரம்ப் ஆதரவாளர்களால் விமர்சிக்கப்படும் டிம் வால்ஸ் துணை அதிபருக்கான சரியான தேர்வு என புகழ்ந்திருக்கிறார் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா. 59 வயதான கமலா ஹாரிஸ் தன்னைவிட ஒரு வயது மூத்தவரான 60 வயது டிம் வால்ஸை துணை அதிபர் வேட்பாளராகத் தேர்வு செய்திருக்கிறார். டிம் வாலஸ் பல ஆண்டுகளாக பள்ளியில் கால்பந்து பயிற்சியாளராக, ஆசிரியராக வேலை பார்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
"டிம் வால்ஸ் ஒரு கவர்னர், முன்னாள் பயிற்சியாளர் மற்றும் ஆசிரியர். மிகுந்த அனுபவமிக்கவர். அவர் தனது சொந்த குடும்பத்தைப்போல் உழைக்கும் குடும்பங்களுக்காக பாடுபடுகிறவர். நாங்கள் ஒரு சிறந்த கூட்டணியை உருவாக்கியிருக்கிறோம். தேர்தல் களத்தில் நாங்கள் தாமதமாகத் தொடங்கினாலும் ஒன்றிணைந்து போராடி வெற்றிபெறுவோம்'’ என தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார் துணை அதிபர் கமலா ஹாரிஸ். டிம் வால்ஸ் கமலா ஹாரிஸூக்கு நன்றி தெரிவித்திருப்பதோடு ‘’இது என் வாழ்நாளுக்குமான மரியாதை" என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்.
நவம்பர் 5-ம் தேதி நடைபெற இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளருக்கு முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பும், துணை அதிபர் வேட்பாளருக்கு ஓஹியோ செனட்டரான ஜே.டி.வான்ஸும் போட்டியிடும் நிலையில், ஜனநாயகக் கட்சியின் சார்பில் இவர்களை எதிர்த்து தற்போது துணை அதிபரான கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளருக்கும், டிம் வால்ஸ் துணை அதிபர் வேட்பாளருக்கும் போட்டியிடுகிறார்கள்.
கமலாவும், வால்ஸும் தீவிர வலதுசாரிக் கூட்டணியான டொனால்ட் டிரம்ப், ஜேடி வான்ஸை வீழ்த்துவார்களா?