‘’அது என் அப்பா’’... அமெரிக்க அரசியல் மாநாட்டில் கதறி அழுத டிம் வால்ஸின் மகன்!
அமெரிக்காவில் அதிபர், துணை அதிபருக்கான தேர்தல் நெருங்கும் நிலையில் ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாடு சிக்காகோவில் நான்கு நாட்களாக நடைபெற்றுவருகிறது. அதில் கடைசி நாளான இன்று அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸும், துணை அதிபர் வேட்பாளராக டிம் வால்ஸும் அதிகாரப்பூர்வமாக போட்டியிடும் பொறுப்பை ஏற்கிறார்கள்.
இந்நிலையில் டிம் வால்ஸ் சற்றுநேரத்துக்கு முன்னதாக துணை அதிபர் வேட்பாளராக போட்டியிடுவதை கட்சித்தொண்டர்கள் முன்னிலையில் உறுதிப்படுத்தினார். அப்போது கூட்டத்தில் இருந்த டிம் வால்ஸின் 17 வயது மகன் கஸ் வால்ஸ் ‘’அது என் அப்பா’’ என மேடையைப் பார்த்து பரவசத்தோடு, கைகள் தட்டி கதறியழுதது எல்லோரையும் நெகிழ்வுக்குள்ளாக்கியது.
மினசோட்டா கவர்னரான டிம் வால்ஸின் மகன் கஸ் வால்ஸ் சொற்களற்ற கற்றல் கோளாறு, கவனக்குறைவு/அதிக செயல்பாடு கோளாறு (ADHD) மற்றும் பதட்டம் ஆகிய நரம்பியல் பிரச்சனைகளால் சவால்களை சந்தித்துவருபவர்.
ஒரு பிரபல பத்திரிகைக்கு அளித்தப் பேட்டியில் டிம் வால்ஸும், அவரது மனைவி க்வென் வால்ஸும், ‘’கஸ் டீனேஜராக வளர்ந்தபோது தனிமையை அதிகம் விரும்பினான். வீடியோ கேம்கள் விளையாடுவதில் அதிக ஆர்வம் செலுத்தினான். பதின்ம வயதிலேயே, அவன் சொற்களற்ற கற்றல் கோளாறு, கவனக்குறைவு/அதிக செயல்பாடு கோளாறு (ADHD) மற்றும் பதட்டம் ஆகிய நரம்பியல் பாதிப்புகளால் பாதிக்கப்பட்டான்'’ எனச்சொல்லியிருக்கிறார்கள்.
‘’எங்களுக்கு கஸ்ஸின் பிரச்சனைப் புரிய கொஞ்சம் காலம் எடுத்தது. கஸ் புத்திசாலித்தனமானவன். நம்மில் பலர் கடந்து செல்லும் விஷயங்களைக் கூட கூர்ந்து கவனிப்பவன். எல்லாவற்றுக்கும் மேலாகன் அவன் சிறந்த மகன்’’ என்று சொல்லியிருக்கிறார்கள்.
சொற்களற்ற கற்றல் குறைபாடு என்றால் என்ன?
சொற்கள் அல்லாத கற்றல் குறைபாடு என்பது ஒரு நரம்பியல் பிரச்சனை. இது குழந்தைகளுக்கு காட்சி மற்றும் இடம் சார்ந்த அல்லது சொற்கள் அல்லாத குறிப்புகள் உதாரணமாக கணிதம் ஆகியவற்றை செயலாக்குவதில் சிக்கல்களை உண்டாக்கும். மற்றபடி இவர்கள் பேசுவதிலோ, வாழ்விலோ எந்த பாதிப்பையும் உண்டாக்காது.
ஜனநாயகக் கட்சி மாநாட்டில் கஸ் வால்ஸ் செய்த உணர்ச்சிகரமான வெளிப்பாடு, வால்ஸ் குடும்பம் சந்தித்த சவால்களையும், அரசியல் வாழ்வில் மனிதாபிமானத்தையும் மீண்டும் வெளிக்கொண்டு வந்திருக்கிறது. இந்த சிறப்புத் தருணம், அரசியலில் இருக்கும் மனிதர்கள், அவர்களது குடும்பங்கள், மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து அனைவரையும் சிந்திக்க வைப்பதாக இருக்கிறது!