திருப்பதி லட்டு ஏன் குஜராத் ஆய்வகத்துக்கு மட்டும் அனுப்பப்பட்டது? சதி இருப்பதாக குற்றச்சாட்டு!
திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் கடந்த ஜெகன் மோகன் ஆட்சியின்போது மாட்டு கொழுப்பு, பன்றி கொழுப்பு, மீன் எண்ணெய் கலந்திருப்பதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டினார். அவருடைய குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக குஜராத்தில் உள்ள நேஷனல் டெய்ரி பிளான் (NDP) ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்ட திருப்பதி லட்டுவின் தரச்சான்றிதழை ஆதாரமாகக் காட்டினார்.
சந்திரபாபு நாயுடுவின் அறிக்கைப்படி குஜராத்துக்கு ஜூலை 6 மற்றும் ஜூலை 12-ம் தேதிகளில் நான்கு லட்டுகள் அனுப்பப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதாவது ஜெகன் மோகன் ஆட்சியில் ஒப்பந்தம் வழங்கி பெறப்பட்ட நெய்யில் மீன் எண்ணெய், மாடு மற்றும் பன்றி கொழுப்பு கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி அந்த காலகட்டத்தில் திருப்பதி கோயிலுக்கு நெய்யை வழங்கிவந்த தமிழ்நாட்டின் திண்டுக்கல்லைச் சேர்ந்த ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆந்திர அரசு தெரிவித்துள்ளது. ஆனால், இந்தக்குற்றச்சாட்டை ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் முற்றிலுமாக மறுத்திருக்கிறது. தாங்கள் அனுப்பிய நெய்யில் எந்தப் பிரச்சனையும் இல்லை. அந்தக் காலகட்டத்தில் பல்வேறு நிறுவனங்கள் நெய்யை அனுப்பியுள்ளன எனக் கூறியுள்ளது ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம். இதற்கிடையே குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ஜெகன் மோகன் ரெட்டியும், அவரது கட்சியும் சந்திரபாபு நாயுடு அரசியல் உள்நோக்கத்துடன் இப்படி ஒரு பொய் புகாரை கிளப்பியிருப்பதாக ஆந்திர உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கிறார்கள்.
‘’ஹைதராபாத்தில் மிகவும் நவீனமான FSL ஆய்வகம் இருக்கும்போது ஏன் லட்டு மாதிரிகள் குஜராத்தில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு சோதிக்கப்பட்டன, ஏன் ஓரே ஒரு குறிப்பிட்ட ஆய்வகத்துக்கு மட்டும் சோதனைக்கு அனுப்பினார்கள், ஒரே நேரத்தில் பல ஆய்வகங்களுக்கு ஏன் அனுப்பவில்லை, இந்த ஆய்வகத்தின் உண்மைத்தன்மையை எப்படி சோதிப்பது’’ என கேள்வி எழுப்பியிருக்கும் அரசியல் விமர்சகர்கள், ‘’இது சந்திரபாபு நாயுடுவும், பிஜேபியும் எதையோ மறைக்க கிளப்பிவிட்டிருக்கும் பிரச்சனையாகவே தெரிகிறது. ஜூலையில் அனுப்பப்பட்ட மாதிரிகளின் முடிவுகளை செப்டம்பரில் அறிவிக்க வேண்டிய காரணம் என்ன’’ எனவும் அவர்கள் தங்களது சந்தேகத்தை முன்வைத்துள்ளனர்.