Tony Blair : ‘’அமெரிக்கா, சீனா, இந்தியா மூவரிடமும் உஷாராக இருங்கள்'' - கீர் ஸ்டார்மருக்கு அறிவுரை!
இங்கிலாந்தின் புதிய பிரதமராக கீர் ஸ்டார்மர் பதவியேற்றிருக்கும் நிலையில் அவருக்கு சில அறிவுரைகளை வழங்கியிருக்கிறார் முன்னாள் பிரதமர் டோனி பிளேர். மூன்று விஷயங்கள் குறித்து புதிய அரசு கவனமாக இருக்கவேண்டும் என அறிவுறுத்தியிருக்கிறார்.
1. புலம்பெயர் மக்கள்!
புலம்பெயர்ந்து வரும் மக்களிடம் கவனமாக இருங்கள். இதில் பெரும்பான்மையானவர்கள் தீவிர வலதுசாரிகளாக இருக்கிறார்கள். முற்போக்காளர்கள் சொல்வதைக் காதுகொடுத்து கேட்கலாம். அவர்களிடம் இருந்து வரும் நல்ல கருத்துகளை எடுத்துக்கொள்ளலாம். ஆனால், பொதுமைவாதிகள் சொல்வதை அப்படியே எடுத்துக்கொள்ளக்கூடாது. அவர்களின் கருத்துகளை பகுப்பாய்வு செய்யவேண்டியது அவசியம். பொதுமைவாதிகள் எதாவது குறையிருந்தால் அதைப் பயன்படுத்திக்கொள்ளத்தான் பார்க்கிறார்களே தவிர, அதைக் களைய எந்த வேலையும் செய்வதில்லை. அதனால் நம் நாட்டுக்குள் நீங்கள் குடியேற்றும் மக்கள் குறித்து கவனமாக இருங்கள். நீங்கள் குடியேற்றத்தில் கட்டுப்பாடுகளை நிச்சயம் வைத்திருந்தே ஆகவேண்டும்.
2. எல்லோருக்கும் கதவுகளை அடைக்கவேண்டாம்!
இதனால் நான் குடியேற்றத்துக்கு எதிராகப் பேசுகிறேன் என எடுத்துக்கொள்ளவேண்டாம். பல நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்து வந்த மக்களால்தான் கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு, பொருளாதாரம் என எல்லாமே மேம்பட்டிருக்கிறது. புலம்பெயர் மக்களால் பெரிய அளவில் நன்மைகள் நடந்திருக்கிறது. ஆனால், அதேசமயம் நாட்டுக்குள் யார் வருகிறார்கள், எதற்காக வருகிறார்கள், எதற்காக இங்கே குடியேறுகிறார்கள் என்பதை மிகவும் கவனத்துடன் கண்காணிக்க வேண்டும்.
3. அமெரிக்கா, சீனா, இந்தியா… கவனம் தேவை!
அடுத்த இருபது ஆண்டுக்களுக்குள் அமெரிக்கா, சீனா, இந்தியா என உலகில் மூன்று பேரரசுகள் உருவாகி நிற்கும். இவர்களை சமாளிக்க மற்ற எல்லா நாடுகளுக்கும் இருக்கும் ஒரே வழி, தனித்தனியாக இல்லாமால் கூட்டாக இருப்பதே. அதனால்தான் ஐரோப்பிய கூட்டணியில் இருந்து இங்கிலாந்து வெளியேறியதை நான் முட்டாள்தனமான முடிவு என்கிறேன்’’
எனப்பேசியிருகிறார் டோனி பிளேர்.