எலான் மஸ்க்குடன் பிரசாரம் செய்த டொனால்ட் டிரம்ப்... படுகொலை முயற்சி நடந்த அதே இடம், அதே நேரம்!
குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப்பை தேர்தல் பிரசாரத்தில் வைத்து சுட்டுக்கொல்ல ஜூலை 13-ம் தேதி படுகொலை முயற்சி நடந்தது. இந்நிலையில் தன்னை சுட்டுக்கொல்ல முயற்சி நடந்த அதே இடத்தில் இன்று காலை (அக்டோபர் 6) தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார் டிரம்ப்.
பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பட்லர் எனும் பகுதியில்தான் க்ரூக்ஸ் எனும் இளைஞன் டொனால்ட் டிரம்ப்பை சுட்டுக்கொல்ல முயற்சி செய்தார். இன்று அதே இடத்தில் டொனால்ட் டிரம்ப் தனது பிரசாரத்தை நடத்தினார்.
உலகின் முன்னணி தொழிலதிபரும், எக்ஸ் தளத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் முதல் முறையாக டிரம்ப்பின் தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொண்டார். மேடையில் டிரம்ப் எலான் மஸ்க்கை அழைக்க கூட்டத்தைப் பார்த்து பரவசமான எலான் மஸ்க் மேடையில் எகிறிக் குதித்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
டிரம்ப்பின் மீது படுகொலை முயற்சி நடந்த நேரமான 6.11 மணிக்கு கூட்டத்தில் கொல்லப்பட்டவர்களுக்காக 1 நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. ''மக்களைவிட தொழிலதிபர்களை, வெள்ளை இன பெரும் முதலாளிகளை முன்னிலைப்படுத்தவே டிரம்ப் தேர்தலில் நிற்கிறார் என்பதற்கு எலான் மஸ்க்கின் பிரசாரமே ஒரு சான்று. எலான் மஸ்க் - டிரம்ப் கூட்டணியால் ஒரு நடுநிலைவாதியின் வாக்கைக்கூட பெற முடியாது'' என ஜனநாயகக் கட்சியினர் இக்கூட்டத்தை விமர்சித்து வருகின்றனர்.