டிரம்ப் Vs கமலா : அமெரிக்காவில் வாக்குப்பதிவு முடிந்து வாக்கு எண்ணிக்கை ஆரம்பம்… வெல்லப்போவது யார்?
அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பும், தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸும் போட்டியிட்டிருக்கிறார்கள். இந்திய நேரப்படி நேற்று மாலை 5.30 மணியளவில் தொடங்கிய வாக்குப்பதிவு இன்று அதிகாலை 5.30 மணிக்கு முடிவடைந்திருக்கிறது.
வாக்கு எண்ணிக்கை முடிந்து வாக்கு எண்ணிக்கை தொடங்கியிருக்கும் நிலையில் முழுமையான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாக இரண்டு நாட்களுக்கு மேல் ஆகும். ஆனால், தற்போதைய வாக்கு எண்ணிக்கைப்படி டொனால்ட் டிரம்ப், கமலா ஹாரிஸைவிடவும் அதிக எலக்டோரல் வாக்குகள் பெற்றுவருகிறார்.
கடந்த 2020 தேர்தலில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் 306 எலக்டோரல் வாக்குகளைப் பெற, டொனால்ட் டிரம்ப் 232 எலக்டோரல் வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியடைந்தார். ஆனால், இந்த தோல்வியை டொனால்ட் டிரம்ப் இதுவரை ஒப்புக்கொள்ளவில்லை.
2016 தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் டொனால்ட் டிரம்ப்பைவிடவும் அதிக வாக்குகள் பெற்றிருந்தபோது எலெட்டோரல் வாக்கு அடிப்படையில் டொனால்ட் டிரம்ப் 304 எலக்டோரல் வாக்குகளும், ஹிலாரி 227 எலக்டோரல் வாக்குகளும் பெற்றதாக அறிவிக்கப்பட்டு டொனால்ட் டிரம்ப் அதிபரானார்.
ஆனால், இந்த தேர்தல் கடுமையான போட்டி நிலவும் தேர்தலாக இருக்கும் எனச்சொல்லப்படுகிறது. வெற்றிக்கு 270 எலக்டோரல் வாக்குகள் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. கமலா ஹாரிஸ் இந்த தேர்தலில் வெற்றிபெற்றால் அமெரிக்காவின் முதல் பெண் அதிபராக சாதனைப்படைப்பார்.