‘’மது குடித்துவிட்டு வரக்கூடாது… டாஸ்மாக் கடைகளில் நிற்கக் கூடாது'’- விஜய்யின் புதிய கட்டுப்பாடுகள்!
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வரும் அக்டோபர் 27-ம் தேதி நடைபெற இருக்கிறது. தீபாவளிக்கு முன்பாக மாநாடு நடக்க இருப்பதால் இந்த மாநாட்டினால் பொதுமக்களுக்கு எந்த சிரமும் ஏற்பட்டு, கட்சிக்கு கெட்டப்பெயர் உருவாகிவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார் விஜய். அதனால் பொதுச்செயலாளர் ஆனந்த் மூலம் எல்லா கட்சி நிர்வாகிகளுக்கும் புதிய கட்டுப்பாடுகள் கொண்ட சுற்றறிக்கையை அனுப்பியிருக்கிறார்.
அதில் இடம்பெற்றிருக்கும் முக்கிய கட்டுப்பாடுகள் இங்கே!
மாநாட்டுக்கு வரும் யாரும் மது அருந்திவிட்டு வரக்கூடாது. அதேப்போல் கூட்டம் முடிந்ததும் டாஸ்மாக் கடைகளுக்குப் போய் நிற்கக்கூடாது. நேராக அவரவர் ஊர்களுக்கு, வீடுகளுக்குத் திரும்பவேண்டும். கட்சிக்கொடி, கட்சி சட்டைகள் அணிந்த யாரும் டாஸ்மாக் கடைகளில் ஒன்று கூடக்கூடாது.
மாநாட்டில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். பெண்களைக் கிண்டல் அடிப்பதோ, பெண்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் செயல்களையோ செய்யக்கூடாது.
சாலையில் செல்லும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது.
போலீஸ் அதிகாரிகள், பெண் காவலர்களிடம் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும்.
இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் சாகசங்கள், பைக் ஸ்டன்ட்டுகளில் ஈடுபடக் கூடாது. இரண்டு பேருக்கு மேல் பைக்கில் வரக்கூடாது
மருத்துவ குழு மற்றும் தீயணைப்பு துறையினருக்கு உரிய வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்.
பேருந்து மற்றும் வாகனங்களில் தகுந்த எண்ணிக்கையில் மட்டுமே தொண்டர்களை அழைத்து வர வேண்டும். அளவுக்கு அதிகமான கூட்டத்தினரை ஒரே வாகனத்தில் அழைத்துவரக்கூடாது. போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தி மக்களுக்கு சிரமத்தை தரக்கூடாது.
எனப் பல்வேறு கட்டுப்பாடுகள் அடங்கிய சுற்றறிக்கையை விஜய் சார்பாக கட்சி நிர்வாகிகளுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.